(Source: Poll of Polls)
Crime: தஞ்சை பகுதியில் இருவேறு இடங்களில் பைக் திருட்டு; மணல் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்
தஞ்சை பெரியகோயில் பகுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தான் நிறுத்தி வைத்து விட்டு சென்ற பைக்கை காணவில்லை என்று போலீசில் புகார் செய்துள்ளார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சரத் சிவராம் (24). இவர் தஞ்சைக்கு சுற்றுலாவாக வந்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த பைக்கை தஞ்சை பெரிய கோயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். வாகன நிறுத்துமிடத்தில் வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பல இடங்களில் தேடிப் பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு பைக் திருட்டு: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் சலாம் (35). சம்பவத்தன்று தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு வந்த இவர் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் அப்துல் சலாம் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மணல் கடத்திய வாகனம் பறிமுதல்: தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூர் ஆலக்குடி சாலையில் கள்ளப்பெரம்பூர் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது போலீஸாரை பார்த்ததும் அவ்வழியே லோடு ஆட்டோவில் வந்த நபர் அதில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். லோடு ஆட்டோவை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர் கள்ளப்பெரம்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (22 ) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் லோடு ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு ஹரிஹரனை கைது செய்தனர்.
கொலை வழக்கில் சரண்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சாமிநாதன் (40). வழக்கறிஞர். கடந்த 7ம் தேதி சாமிநாதன் ஜெயங்கொண்டம் அடுத்த அணைகூடம் கிராமத்தில் தனது தங்கை திருமணத்திற்காக சென்று இருந்தார்.
அப்போது மூன்று பைக்கில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் சாமிநாதனை சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கும்பகோணம் திருநறையூர் அய்யம்பாளையம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குருமூர்த்தி(21), நாச்சியார் கோவிலை சேர்ந்த பாஸ்கர் மகன் தினேஷ்குமார்(23), கும்பகோணம் அய்யம்பாளையம் தெருவை சேர்ந்த செல்வம் மகன் கரன்(33), கும்பகோணம் உள்ளிக்கான் சந்து சேர்ந்த முகமதுரபிக் மகன் தமீம் அன்சாரி(35), நாச்சியார்கோவில் ராமநாதன் நகரை சேர்ந்த பிரபு மகன் தினேஷ்குமார்(27), நாச்சியார்கோவில் ராமநாதன் நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் விஜய்(20) ஆகிய 6 பேரும் திருவையாறு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர் அவர்களை நீதிபதி ஹரிராம் 6 பேரையும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.