Kidney Scam: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்க சென்ற ஆடிட்டரிடம் ரூ.6.2 லட்சம் மோசடி...என்ன நடந்தது?
பெங்களூருவில் கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்க சென்றவரிடம் ரூ.6.2 லட்சம் பணம் மோசடி நடந்துள்ளது.
கடனை அடைப்பதற்காக சிறுநீரகத்தை விற்க முடிவு செய்த நபரை ஏமாற்றி 6 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் பறித்துள்ளது.
கடன் தொல்லை:
பெங்களூருவில் மடிக்கேரி பகுதியைச் சேர்ந்த 46 வயது உடைய நபர் ஆடிட்டராக பணி புரிந்து வருகிறார். அந்த நபருக்கு கடன் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து, கடனை அடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நிலையில், தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தார்.
இதையடுத்து, இணையதளத்தில் சிறுநீரகத்தை விற்பது தொடர்பாக தேடியுள்ளார். அப்போது, htkidneysuperspecialist.org, என்ற இணையதளத்தில் சிறுநீரகம் விற்பனை செய்வது தொடர்பான தகவலை பார்த்துள்ளார். மேலும் அந்த இணையதளத்தில் 9631688773 என்ற தொலைபேசி எண்ணும் இருந்துள்ளது.
இதையடுத்து அந்த எண்ணை அழைத்து பேசியதில், தனது வாட்சப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, உங்களது பெயர், முகவரி, இரத்த வகை போன்ற அடிப்படை விவரங்களைப் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
அடிப்படை விவரங்களை தெரிவித்ததையடுத்து, சிறுசீரகத்துக்கு 2 கோடி ரூபாய் தருவதாகவும், அதில் பாதி பணத்தை முன்பணமாக தருவதாகவும் தெரிவித்தார்.
பணம் பறிப்பு:
ஆனால் இந்த செயல்பாடுகளை தொடங்க வேண்டும் என்றால் முதலில் NOC மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ. 8000 செலுத்துமாறு கேட்க, சிஏ நபரும் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர், பதிவீடு செய்ய வேண்டும் என சொல்லி ரூ. 20,000 செலுத்துமாறு கேட்க, அந்த தொகையையும் அனுப்பியுள்ளார்.
பின்னர் குறியீட்டை இயக்க ரூ.85,000 கேட்க, அந்த தொகையையும் அனுப்பியுள்ளார்.
பணத்தை, உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்ப வரி தொடர்பாக ரூ. 5 லட்சத்தை கட்ட வேண்டும் என கூற, தாம் சிக்கலில் மாட்டியுள்ளோம் என அறியாது, அவரை நம்பி, மேலும் 5 லட்சத்தை, கடந்த மார்ச் 2 ஆம் தேதி பணம் செலுத்தினார்.
சுதாரிப்பு:
இந்நிலையில், பணம் பறிப்பதில் மோசடியின் உச்சிக்கு சென்ற கும்பல், பயங்கரவாதி இல்லை என்பதற்காக 7.5 லட்சம் செலுத்த வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ஒரு பெண் அழைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் , தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டார். நீங்கள் தொடர்ந்து பலமுறை ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் என அறிவுரை கூற, காவல்துறையிடம் புகாரளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறை, மோசடியின் கும்பலில் வங்கி கணக்கை முடக்கியது. இது தொடர்பாக காவல்துறை தெரிவிக்கையில்,இந்த மோசடியானது பலரிடம் மோசடி செய்து பணம் பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில், எனக்கு கடன் அதிகாமக இருந்ததால் சிறுநீரகத்தை விற்க நினைத்தேன், இந்த நிலையிலும், ரூ. 6. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.