(Source: ECI/ABP News/ABP Majha)
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
போக்சோ வழக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , சிறுமியை கடத்திச் சென்றதற்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள வள்ளிபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் இருந்து காணாமல் போய் உள்ளார். சிறுமியை கண்டுபிடித்து தருமாறு பெருமாநல்லூர் காவல் நிலையத்தில், அச்சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பாலசுப்பிரமணி (23) என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை போக்சோ வழக்காக காவல் துறையினர் மாற்றம் செய்தனர். மேலும் பாலசுப்பிரமணியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் பாலசுப்பிரமணி மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி நாகராஜன் தீர்ப்பு வழங்கினார். போக்சோ வழக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சிறுமியை கடத்திச் சென்றதற்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல கடந்த 2017 ம் ஆண்டு கோவை மாவட்டம் மயிலேறிபாளையம் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ் (30) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சின்னராஜை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சின்னராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். சின்னராஜ்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்