குடிக்கு அடிமையான கணவன் : இரு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை - ஆவடியில் சோகம்!
சென்னை, திருநின்றவூரில் கணவரின் குடிப்பழக்கத்தின் கொடுமையால் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவுரி. அவருக்கு வயது 24. ரமேஷ் – கவுரி தம்பதியினருக்கு 3 வயதில் தீக்ஷிதா என்ற மகளும், ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். ரமேஷ் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
ரமேஷிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலம் என்பதால் ரமேஷிற்கு வேலைவாய்ப்புகளும் இல்லாமல் இருந்துள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து கவுரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், குடிப்பதற்கு பணம் தர வேண்டும் என்று கவுரியிடம் சண்டையிடுவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ரமேஷின் செயல்களால் கவுரி மிகவும் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை ரமேஷ் குடிப்பதற்கு பணம் தருமாறு கவுரியிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், கவுரியிடம் சண்டைபோட்டு குடிப்பதற்கு பணத்தை வாங்கிக்கொண்டு வெளியில் சென்று விட்டார்.
இதனால், மிகவும் மனம் உடைந்து விரக்தியடைந்த கவுரி, தானும் தற்கொலை செய்து, குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட கவுரி, வீட்டின் மேற்கூரையில் இரும்பு குழாயில் தனித்தனி புடவையில் தூக்கு கயிறு கட்டியுள்ளார். அதில் தனது மூன்று வயது மகள் தீக்ஷிதா மற்றும் ஒன்றரை வயது மகன் அஸ்வின் இருவரையும் தானே தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர், வேதனை தாங்க முடியாமல் அருகில் இன்னொரு புடவையில் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
ஆடி மாதம் என்பதால் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் கூழ் ஊற்றுவதற்காக கவுரியை அழைத்துள்ளார். நீண்டநேரமாகியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக அந்த பெண் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது, தனது குழந்தைகள் இருவருடனும் கவுரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், இதுபற்றி தகவறிந்த திருநின்றவூர் போலீசார் தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் மற்றும் குழந்தைகளின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரமேஷ் மற்றும் கவுரி தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகிறது. கணவரின் குடிப்பழக்கத்தின் கொடுமை தாங்க முடியாமல் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு, கவுரி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050