மூணாறு : திமிங்கலத்தின் எச்சத்தை 5 கோடிக்கு விற்க முயற்சி..! தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!
கேரள மாநிலம் மூணாறில் திமிங்கலத்தின் எச்சத்தை 5 கோடிக்கு விற்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்பர்கிரிஸ் என்பது எண்ணெய்த் திமிங்கலத்தின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். ஒரு எண்ணெய்த் திமிங்கிலம் எந்த கடல் விலங்கையும் வேட்டையாடு உண்ணும்போது, அதன் செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவத்தை வெளியிடுகிறது. இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய்த் திமிங்கிலத்தால் வேட்டையாடப்படும் விலங்குகளின் கூர்மையான உறுப்புகள் அல்லது பற்கள், திமிங்கலத்தின் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. செரிமானத்துக்கு பிறகு எண்ணெய்த் திமிங்கிலங்கள் வாய் மூலம் வாந்தியெடுப்பதன் மூலம், உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றும். சில எண்ணெய்த் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் வாந்தியை வெளியேற்றுகிறது. இந்த திமிங்கல எச்சத்திற்கு உலக சந்தையில் பல கோடி மதிப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திமிங்கல எச்சத்தை கள்ளத்தனமாக விற்க முயன்றுள்ளது ஒரு கும்பல்.
தமிழக கேரள எல்லைப் பகுதியான கேரள மாநிலம் மூணாறில் திமிங்கலத்தின் எச்சமான அம்பெர்கிரிசை ரூபாய் ஐந்து கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாக கேரள வனத்துறை விஜிலென்ஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மூணாறு ரேஞ்சர் ஹரீந்திர குமார், விஜிலென்ஸ் டெபுட்டி ரேஞ்சர் ஜெய்சன் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் மூணாறில் உள்ள ஒரு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஐந்தரை கிலோ எடையுள்ள அம்பெர்கிரிஸ் இருப்பதை கண்டுபிடித்தனர் .
இதனையடுத்து அங்கு தங்கியிருந்த மூணாறை சேர்ந்த 48 வயதாகும் முனுசாமி மற்றும் அவரது தம்பியான திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்த முருகன் (42) ரவிக்குமார் (40), தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வேல்முருகன் (43), சேது (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் வனத்துறையினர் எங்கிருந்து எச்சம் கொண்டு வரப்பட்டது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், "இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் விதிகளின் கீழ் எண்ணெய் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. இந்த எண்ணை திமிங்கலத்தின் எச்சத்தை திருட்டுத்தனமாக விற்பனை செய்வது குற்றமாகும். எனவே குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸ் சர்வதேச சந்தையில் ரூபாய் எட்டு கோடி மதிப்புடையது . இது மசாலா தயாரிப்பு மருத்துவ பயன்பாடு மற்றும் வாசனை திரவியம் என பல விதங்களில் பயன்படுவதால், இதனை கள்ளத்தனமாக விற்க முயற்சிக்கின்றனர். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.