Chennai : சென்னையில் பரபரப்பு.. பதைபதைத்த சுற்றம்.. 5-வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறுமி..
பெற்றோரின் அஜாக்கிரதையால் 5வது மாடியில் இருந்து சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5-வது மாடியில் இருந்து சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியை சேர்ந்தவர் ரவி. பூந்தமல்லி நகராட்சியில் வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் இவர் கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5வது தளத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தியா என்ற மனைவியும், 8 வயதில் ஆரோ என்ற மகனும், 4 வயதில் வின்சி என்ற மகளும் உள்ளனர்.
தனியாக இருந்த சிறுமி:
இந்நிலையில், நேற்று காலை ரவி கோவிலுக்கும், ஆரோ விளையாட்டுப் பயிற்சிக்கும் சென்றுவிட்டனர். வின்சி மட்டும் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். மகள் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறார். எழுவதற்குள் வந்துவிடலாம் என்று எண்ணி சிந்தியாவும் சிறுமியை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு நடைபயிற்சிக்குக் கிளம்பிவிட்டார். நடைபயிற்சி முடித்து வந்த சிந்தியா வீட்டிற்குள் வின்சியைத் தேடி பார்த்தபோது அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த சிந்தியா, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, வின்சி கீழே இருப்பதாகக் கூறியுள்ளனர். பூட்டியிருந்த வீட்டில் இருந்து கீழே எப்படிச் சென்றார் என்று குழம்பிய சிந்தியா, கீழ் வீட்டிற்கு போனபோது வின்சி மயக்க நிலையில் இருந்துள்ளார்.
சிறுமி உயிரிழப்பு:
இதனையடுத்து, வின்சியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு சிந்தியா உட்பட பலர் கதறி அழுதுள்ளனர். சிறுமி உயிரிழந்தது குறித்து பூந்தமல்லி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி வின்சி 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது தெரியவந்தது. சிறுமியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறை தகவல்:
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “3 பேரும் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி மட்டும் தனியாகத் தூங்கியுள்ளார். திடீரென்று கண் விழித்த அவர் வீட்டில் யாரும் இல்லாதது அறிந்து அழுதுள்ளார். பின்னர் வீட்டின் பின்பகுதியில் உள்ள கதவைத் திறந்து பால்கனி வழியாக வந்து அங்கிருந்த நாற்காலி மீது ஏறி நின்று சத்தம் போட்டு அழுதுள்ளார். அப்போது, நிலை தடுமாறிய சிறுமி வின்சி 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் யாரும் இல்லை என்பதால் சிறுமி கீழே விழுந்தது தெரியவில்லை. சிறிதுநேரம் கழித்து அவ்வழியே வந்த காவலாளி சிறுமி மயக்கமாக இருப்பதாக நினைத்து பக்கத்து வீட்டில் ஒப்படைத்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் சிறுமி வின்சி உயிரிழந்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
பெற்றோரின் அஜாக்கிரதையால் சிறுமி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.