14 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. மத்திய அரசு அதிகாரி உள்பட 11 பேர் கைது
திருச்செங்கோடு அருகே 14 வயது சிறுமியை, கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரி உள்பட 12 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வட்டமலை குள்ளப்பநகரை சேர்ந்த தறித்தொழிலாளியின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில், இருவருக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகளான 14 வயது சிறுமி, 6-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து, அவரிடம் அவரது சகோதரி விசாரித்துள்ளார். அப்போது, தன்னை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி, child line-க்கு கால் செய்து தனது தங்கைக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில், அந்த சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக 12 பேர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக தெரியவந்தது. இந்த கொடூரமான செயலை செய்து வந்தவர்கள் 24 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள். இதில், ஒருவர் மத்திய அரசு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் நல அமைப்பினர், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் 12 பேரை இன்று காலை கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.