விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்
சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய 285 கிலோ கஞ்சா பொட்டலங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை பகுதிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பு 285 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு தடை செய்துள்ள கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்
தஞ்சை சரக டி.ஐ.ஜி., ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி., ஜெயசந்திரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன், ஏட்டு உமா சங்கர், போலீசார் சுந்தர்ராமன், கந்தசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தஞ்சாவூர் சரகத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தஞ்சை நகர் மற்றும் எல்லைப்பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சைக்கு லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ஹல்க் கார்த்தி (33), தென்காசியை சேர்ந்த ரகுநாதன் (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய 285 கிலோ கஞ்சா பொட்டலங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கஞ்சா கடத்தலில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும், கஞ்சா கடத்தலுக்கு உதவியாக இருந்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்த தனிபடை போலீசாருக்கு டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதிநகர் பகுதியில் அடுத்தடுத்து வேகமாக வந்த 2 கார்களையும் தனிப்படையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது கார்களின் பின்பகுதியில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த த.ராஜேஷ் (30), கருணாவதிநகரை சேர்ந்த ஜெ.பிரகாஷ்(31), ஞானம் நகர் வே.அசோக்(33) கும்பகோணத்தை சேர்ந்த கா.துளசிராமன் (41), திருவாரூர் அச்சுதமங்கலம் செ.கார்த்தி (21) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.