Paytm Zomato: சினிமா டிக்கெட் வியாபாரம் - ஜொமாட்டோவிடம் கைமாறும் பேடிஎம்மின் சேவை - விலை எவ்வளவு தெரியுமா?
Paytm Zomato Business: சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் பேடிஎம் நிறுவனத்தின் வணிகத்தை, ஜொமாட்டோ நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Paytm Zomato Business: சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் பேடிஎம் நிறுவனத்தின் வணிகத்தை, சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஜொமாட்டோ நிறுவனம் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சினிமா டிக்கெட் வணிகம்:
உணவு விநியோக நிறுவனமான Zomato, பேடிஎம் நிறுவனத்தின் திரைப்பட டிக்கெட் மற்றும் நிகழ்வுகள் வணிகத்தைப் பெறுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சேவைகளை சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய பேடிஎம் நிறுவனம் தீவிரம் காட்டுகிறது. தங்களது பணப்பரிவர்த்தனை சேவை முடக்கப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய, இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஜொமாட்டோவின் விரிவாக்க திட்டம்:
எகானமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, Paytm இன் நிகழ்வுகள் மற்றும் சினிமா டிக்கெட் வணிகத்தை Zomato பெற்றால், 2022 இல் Blinkit (முன்னர் Grofers) ஐ நான்காயிரத்து 447 கோடி ரூபாய்க்கு கோடிக்கு வாங்கிய பிறகு, அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய கொள்முதல் இதுவாக இருக்கும் . தற்போதுள்ள உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக சேவைகளுக்கு மேல், பொழுதுபோக்கு போன்ற புதிய பகுதிகளுக்கு விரிவடையும் Zomatoவின் உத்திக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Paytm Movies மற்றும் Paytm Insider ஆகிய இரண்டு பிரிவுகளும் ஒன்றாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதை ஒரே யூனிட்டாக உருவாக்குவதே தற்போதைய யோசனையாக உள்ளது. இந்த பிரிவில் கடந்த சில காலங்களாகவே Zomato ஆர்வமாக இருந்த நிலையில், தற்போது பேடிஎம் நிறுவனத்தின் முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரிந்த பேடிஎம் சேவை:
Paytm ஆனது விஜய் சேகர் சர்மாவின் One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கடந்த 2017 ஆம் ஆண்டில், என்ஹெச் 7 வீகெண்டர், ஈடிசி மற்றும் தி க்ரப் ஃபெஸ்ட் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் சொத்துக்களுக்காக டிக்கெட் வழங்கும் தளமான Insider.in-ன்னில் Paytm பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. இதன் மூலம் அனைத்து Paytm வாடிக்கையாளர்களும் பலவிதமான நிகழ்வுகளைக் கண்டறிந்து உடனடியாக முன்பதிவு செய்யக் கூடிய சேவை தொடங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தான் One97 கம்யூனிகேஷன்ஸ் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, வங்கி ஒழுங்குமுறை ஆணையமான ரிசர்வ் வங்கியின் தடை நடவடிக்கையை எதிர்கொண்டது. இதனால், நாடு முழுவதும் பேடிஎம் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இதர கிளை சேவைகளான சினிமா மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனைகளை மேற்கொள்ள முடியாத நிலைய பேடிஎம் எட்டியுள்ளது. இதையடுத்து, தான் டிக்கெட் விற்பனை வணிகத்தை ஜொமாட்டோ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, பேடிஎம் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.