June Rules Change: வீட்டுக்கடன்.. வாகன இன்சூரன்ஸ் உயர்வு..! நாளை முதல் அமலாகும் புதிய விதி! விவரம்!!
எஸ்.பி.ஐ வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் மற்றும் வாகன காப்பீட்டு கட்டண உயர்வானது ஜீன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எஸ்பிஐ - வீட்டுக் கடன் உயர்வு:
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்.பி.ஐ. வங்கியானது, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை (EBLR )உயர்த்தியுள்ளது. ஜீன் 1ஆம் தேதி முதல் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.05 சதவீதமாக அதிகரிக்கிறது. இதனால் வீட்டு கடன் பெற்றவர்கள் அதிக EMI தொகை கட்ட வேண்டிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஆக்சிஸ் வங்கி சேவை கட்டணம் உயர்வு:
ஆக்சிஸ் வங்கியானது, ஊதியம் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. வங்கி கணக்கில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி சேமிப்பு தொகையாக இருந்த ரூ.15,000-த்திலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த சேவை கட்டண உயர்வானது ஜீன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகையான ரூ.25,000-க்கு கீழ் செயல்படும் வங்கி கணக்குகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இருசக்கர வாகன காப்பீடு உயர்வு:
இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் ஜீன் 1ஆம் தேதி முதல் அதிகரிக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. 75 சிசி-க்கு குறைவான வாகனங்களுக்கு காப்பீட்டு கட்டணம் ரூ. 538 ஆகவும், 75 சிசி-க்கு அதிகமாகவும் 150 சிசி க்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு ரூ.714 ஆகவும், 150 சிசி-க்கு அதிகமாகவும் 350 சிசி-க்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு ரூ. 1,366ஆகவும் 350 சிசி-க்கு அதிகமாகவுள்ள வாகனங்களுக்கு ரூ.2,804 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகன காப்பீடு உயர்வு:
நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் ஜீன் 1ஆம் தேதி முதல் அதிகரிக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.1,000 சிசி-க்கு குறைவான நான்கு வாகனங்களுக்கு காப்பீட்டு கட்டணம் ரூ. 2,094 ஆகவும்,1000 சிசி-க்கு அதிகமாகவும் 1,500 சிசி க்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு ரூ.3,416 ஆகவும் 1,500 சிசி-க்கு அதிகமாகவுள்ள வாகனங்களுக்கு ரூ.7,989 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்