Tata Sons Air India Bid: மீண்டும் ஏர் இந்தியாவை வாங்குகிறதா..? டாடா தரும் தொகை எவ்வளவு தெரியுமா...?
ஏர் இந்தியா வரலாற்றில் அக்டோபர் 15 என்பது முக்கியமான நாள். அன்றுதான் கராச்சியில் இந்தியா மும்பைக்கு விமானத்தை ஜே.ஆர்.டி. டாடா இயக்கினார்.
ஏர் இந்தியாவின் பங்கு விலக்கல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட்டின் அஜய் சிங் ஆகியோர் ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதற்கு விண்ணப்பித்திருக்கிறது. புதன் மற்றும் வியாழன் அன்று (29, 30 செப்.) விமான போக்குவரத்து துறை அதிகாரிகளை இந்த இரு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சந்தித்தாக தெரிகிறது.
குறைந்தபட்ச தொகையாக ரூ.15,000 கோடி அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சம் ரூ.20000 கோடி வரைக்கும் இருக்க கூடும். அதாவது குறைந்தபட்ச விலைக்கு கீழ் நிர்ணயம் செய்திருக்கும் பட்சத்தில் மத்திய அரசு விற்காது என தெரிகிறது.
ஆனால் இந்த விலைக்கு மேலே யார் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் ஏர் இந்தியாவை யாருக்கு விற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாகவும், டாடா குழுமத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றாலும் எப்போது அறிவிக்கப்படும் என்பது என்பதை அரசு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. (டாடா குழுமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஏர் இந்தியா இணைப்புக்காக பணியாற்றுகிறார்கள் என தெரிகிறது)
2018-ம் ஆண்டு முதல் ஏர் இந்தியாவின் பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அப்போதைய விதிமுறைகள் காரணமாக யாரும் நிறுவனத்தை எடுக்க முன்வரவில்லை. அப்போது நிறுவனத்தின் 76 சதவித பங்குகள் மட்டுமே விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய 100 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால் இரு நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன.
ஏர் இந்தியாவுக்கு ரூ.43,000 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. புதிதாக வாங்கும் நிறுவனத்துக்கு ரூ.23,000 கோடி கடனும் கிடைக்கும். மீதமுள்ள கடனை ஏர் இந்தியாவின் அசையா சொத்துகளை விற்று மத்திய அரசு அடைக்கும் என தெரிகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பல பகுதிகளில் உள்ள சொத்துகளை விற்று மீதமுள்ள கடனை அடைக்கும்.
ஏர் இந்தியா 2007-08ம் நிதி ஆண்டுக்கு பிறகு லாபம் ஈட்டவில்லை கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை ரூ.70,820 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு உள்நாட்டில் 4,480 வழித்தடங்களும் வெளிநாட்டில் 2,738 வழித்தடங்களும் உள்ளன.
ஒரு வேளை இந்த பங்கு விலக்கல் தோல்வி அடையும் பட்சத்தில் விமான நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்காக மாதம் ரூ.650 கோடி அளவுக்கு மத்திய அரசு முதலீடு செய்யும் என தெரிகிறது.
ஏர் இந்தியா வரலாற்றில் அக்டோபர் 15 என்பது முக்கியமான நாள். அன்றுதான் கராச்சியில் இந்தியா மும்பைக்கு விமானத்தை ஜே.ஆர்.டி. டாடா இயக்கினார். அதனால் அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஏர் இந்தியா குறித்து இறுதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டுக்குள் ஏலம் எடுக்கும் நிறுவனத்துடன் ஏர் இந்தியா முழுமையான இணைக்கப்படும். ஒரு வேளை டாடா குழுமத்துக்கு சென்றால் விமான பிரிவுகளை ஒன்றாக்கும் என தெரிகிறது ( படிக்க : https://tamil.abplive.com/business/tata-group-plans-to-merge-three-companies-air-india-vistara-and-air-asia-19104 )