ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியாவை இணைக்கிறதா டாடா குழுமம்!
ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய மூன்று நிறுவனங்களை இணைப்பதற்கு டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான நிறுவனங்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன. ஃபுல் சர்வீஸ் கேரியர். இதில் எகானாமி மற்றும் பிஸினஸ் வகுப்பு இருக்கைகள் இருக்கும். ஆனால் டாடா குழுமத்தின் விஸ்தாரா இவை இரண்டுக்கும் இடையில் ப்ரீமியம் எகானமி என்னும் மூன்றாவது பிரிவையும் சேர்த்தது. ஃபுல் சர்வீஸ் கேரியருக்கு அடுத்து குறைந்த கட்ட சேவை (எல்சிசி) மற்றும் மிகவும் குறைந்த கட்டண சேவை (யு.எல்.சி.சி.) ஆகிய பிரிவுகள் உள்ளன.டாடா குழுமத்தில் இரண்டு நிறுவனங்கள் உள்ளன. டாடா குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைனஸ்ம் (49%) இணைந்து . ஃபுல் சர்வீஸ் கேரியர் நிறுவனமான விஸ்தாராவை நடத்துகிறது.டாடா குழுமமும் ஏர் ஏசியா bhd (16%)-ம் இணைந்து ஏர் ஏசியா இந்தியா என்னும் பட்ஜெட் விமான நிறுவனத்தை நடத்துகிறது.
இதுதவிர தற்போது பொதுத்துறை நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் விண்ணப்பித்திருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு ஸ்பைஸ்ஜெட் குழுமமும் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஒருவேளை டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா கிடைக்கும் பட்சத்தில் ஒரே குழுமத்தில் மூன்று நிறுவனங்கள் செயல்படும் சூழல் உருவாகும். அதனால் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கலாமா என டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரபல ஆங்கில நாளிதழான எகாமிக் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.ஏர் ஏசியா இந்தியாவில் இருந்து மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா Bhd வெளியேற இருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்குகளை விற்று வெளியேறும் என தெரிகிறது.அதேபோல விஸ்தாராவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு இல்லாமல் தனியாகவே டாடா குழுமம் விண்ணப்பித்திருக்கிறது.
ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய மூன்று நிறுவனங்களை இணைப்பதற்கு டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் தெரியும் என்றும் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் நடந்துவருகிறது என்றும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.ஒரே நிறுவனமாக மாறும்போது பெரிய நிறுவனமாக மட்டும் மாறுவதில்லாமல், வழித்தடங்களை சீர் செய்ய முடியும் என டாடா குழுமம் கருதுகிறது. ஒரு வழித்தடத்தில் மூன்று நிறுவனங்கள் இயங்கும்போது அதனை எப்படி சிறப்பாக இயக்கலாம் என திட்டமிடுவதாக தெரிகிறது.தற்போது ஏர் இந்தியா வசம் 172 விமானங்கள், விஸ்தாரா வசம் 48 விமானங்கள், ஏர் ஏசியா இந்தியா வசம் 28 விமானங்கள் உள்ளன.போக்கு வரத்து சந்தையை எடுத்துக்கொண்டால் ஏர் இந்தியா 13.2 சதவீத சந்தையும், விஸ்தாரா 8.3 சதவீத சந்தையையும், ஏர் ஏசியா இந்தியா 5.2 சதவீத சந்தையும் வைத்திருக்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா யாருக்கு என்பது தெரிந்துவிடும். ஏலத் தொகையினை பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் ஆகாசா விமான நிறுவனமும் அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர இருப்பதால் விமான போக்குவரத்து துறையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.