Sovereign Gold Bond: தங்க முதலீட்டு பத்திரம் வெளியீடு- விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? முழு விவரம்!
Sovereign Gold Bond :தங்க முதலீட்டுப் பத்திரம் விற்பனை சீரிஸ்-2 (Sovereign Gold Bond Scheme) இன்று (11.09.2023) முதல் தொடங்குகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான தங்க முதலீட்டுப் பத்திரம் விற்பனை சீரிஸ்-2 (Sovereign Gold Bond Scheme) இன்று (11.09.2023) முதல் தொடங்குவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்க பத்திரம்
சேமிப்பு, முதலீடு ஆகியவற்றிற்கு ‘தங்கம்’ முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறைந்த வருமானம் உள்ள நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை முதலீட்டு வடிவங்களில் தங்கம் முதன்மையானதாக இருக்கிறது. வருமானத்தில் கொஞ்சமேனும் சேமித்துவிட வேண்டும் என்பதில் எப்போதும் தேர்வாக இருப்பது தங்கம். வாழ்வின் எல்லா நிலைகளிலும் நாம் தங்கம் வாங்கியிருப்போம். தங்க முதலீட்டுப் பத்திரங்கள் (Sovereign Gold Bond) பற்றி பெரும்பாலானோருக்கு சரியான நேரத்தில் தெரிந்திருப்பதில்லை. மத்திய அரசு சார்பில் தங்கத்திற்குப் பதிலாக ரிசர்வ் வங்கியால் தங்க பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இன்றைய விலையில், ஒரு கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலையில் தங்க பத்திரங்களை பணம் கொடுத்து வாங்கலாம். தனிநபர், நிறுவனம், தொண்டு நிறுவனம் என முதலீட்டு நோக்கில் இந்த தங்க பத்திரங்களை வாங்கலாம். முதலீட்டிற்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு நிதியாண்டில் மூன்று முறை தங்க முதலீடு பத்திரம் வெளியிடப்படும்.இந்தப் பத்திரங்களில் குறிப்பிடப்படுவது 24 கேரட் சுத்தத் தங்கம் ஆகும்.
8 வருடங்கள் கழித்து முதிர்வடைந்த பிறகு நமக்குக் கிடைக்கும் தொகைக்கு வரிப்பிடித்தம் எதுவும் செய்யப்படாது. இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரம் வாங்கியவுடன், அதை வைத்திருப்பதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை 2.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்தத் தங்க பத்திரம் வெளியானவுடன் மும்பைப் பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். முதிர்வடையும் காலத்திற்கு முன்பாக விற்பனை செய்யவேண்டும் என்றால் பங்குத் தரகர்களின் உதவிவோடு விற்பனை செய்ய முடியும். ஆண்டுக்கு இரு முறை கிடைக்கும் வட்டிக்கு TDS கிடையாது. அவரசப் பண தேவை இருப்பின், தங்கக் கடன் பத்திரங்களை முதிர்வு காலத்திற்கு முன்பாக சாதாரணத் தங்கம் போல அடமானமும் வைத்துக்கொள்ள முடியும்.
எப்போது வரை வாங்கலாம்?
நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது சீரிஸ் தங்க முதலீட்டுப் பத்திரம் இன்று (11.09.2023) முதல் செப்டம்பர் 15, வரை வாங்கலாம்.
எப்படி வாங்குவது?
வங்கிகள், Stock Holding Corporation of India Ltd (SHCIL), தபால் அலுவலகங்கள் மற்றும் இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களில் இதை வாங்கலாம். ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,923 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஆன்லைன் பேமண்ட் வசதிகள் கொண்டு பணம் செலுத்துபவர்களுக்குக் கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தங்க முதலீட்டில் செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை என்பது இதன் சிறப்பு. நீண்ட கால முதலீட்டுக்காகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் தங்கத்திற்குப் பதிலாகத் தாராளமாக இந்தத் தங்க பத்திரத்தை வாங்கலாம்.
யாரெல்லாம் வாங்கலாம்?
நிதியாண்டில்,தனிநபர், நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் தங்க முதலீட்டுப் பத்திரம் வாங்கலாம். தனிநபருக்கு குறைந்தபட்சமாக 1 கிராம் முதல் 4 கிலோ கிராம்; தொண்டு நிறுவனங்கள் 4 கிலோ கிராம் முதல் 20 கிலோ கிராம் வரை வாங்கலாம். 24 கேரட் தங்கத்தின் மதிப்புக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.