பிட்காயின் வாங்க SBI , HDFC வங்கி சேவையை பயன்படுத்துவரா? உங்களுக்கே இந்த எச்சரிக்கை!
இந்தியாவில் தங்களுடைய வங்கி கணக்கை பயன்படுத்தி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சமீபகாலங்களில் உலகத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மிகவும் பயன்படுத்தப்படுவது கிரிப்டோ கரன்சிதான். பிட்காயின், டாக்காயின் போன்ற பல வகை கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனினும் அமெரிக்க, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கிரிப்டோகரன்சி அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. எனினும் இந்தியாவில் சிலர் பிட்காயின் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி இன்னும் அங்கீகரிக்கவில்லை. அத்துடன் ரிசர்வ் வங்கி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் வங்கிகள் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை அனுமதிக்க கூடாது. மேலும் இந்த பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு கட்டுப்படும் படி எஸ்பிஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுவரை பிட்காயின் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. 30 நாட்களுக்குள் அவர்கள் பதிலளிக்க வில்லை என்றால் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளதாகவும் இந்த வங்கிகள் தெரிவித்துள்ளன. இதனால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியில் ஈடுபட்டவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற உதவும் பணமாக செயல்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணமாக கிரிப்டோகரன்சியை பெற்று கொள்ள சம்மதித்துள்ளனர். மேலும் இந்த கரன்சியை ஒரு பங்குகளை போல் நீங்கள் மற்றவர்களிடம் விற்க மற்றும் வாங்கவும் முடியும். கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுகிறது. கிரிப்டோ கரன்சியின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் ஒரு பொது ரிஜிஸ்டரில் பதிவுசெய்யப்படும்.
HDFC Bank and SBI Credit Card issue advisory on not using their banking facilities for Cryptos (Bitcoins)
— Nagpal Manoj (@NagpalManoj) May 31, 2021
Say may suspend/restrict your bank account/credit card if you continue using it pic.twitter.com/PVGtOYG7vt
இந்தியாவை பொறுத்தவரை இதுவரை கிரிப்டோகரன்சிக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. கிரிப்டோகரன்சி பெரும்பாலும் ஹேக்கர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் இதனை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை. எனினும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை இந்தியாவில் சட்டரீதியில் முறை படுத்தப்படவில்லை. எனவே இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு தொடக்கத்தில் குறைந்து காணப்பட்டாலும் தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த பரிவர்த்தனைகள் முடக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.