Digital Currency : நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் நாணயம்.. ரிசர்வ் வங்கி அளித்த அதிரடி தகவல்..!
நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுக செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
![Digital Currency : நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் நாணயம்.. ரிசர்வ் வங்கி அளித்த அதிரடி தகவல்..! Reserve Bank of India inform digital currency will be introduced tomorrow on a trial basis across the country Digital Currency : நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் நாணயம்.. ரிசர்வ் வங்கி அளித்த அதிரடி தகவல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/31/592486fef6e5181461a8b11a85ddef081667219295495571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுக செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயத்தை அரசே வெளியிடுவது தொடர்பாக நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படவுள்ளது
மக்களவையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் கிரிப்ட்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.
டிஜிட்டல் நாணயம்
உலகம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசே டிஜிட்டலில் நாணயத்தை அறிமுகம் செய்துள்ளது. இது சிபிடிசி எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (central bank digital currency) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இந்த டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்று நம்பப்படுகிறது.
டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் ஒன்றா?
டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் வெவ்வேறு. இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், இந்த டிஜிட்டல் நாணயம் வெளியாக உள்ளது. இது மத்திய வங்கியால் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பணமாகும். இந்த டிஜிட்டல் நாணயம் காகிதத்தில் அச்சிடப்படும் பணத்தைப் போன்றதுதான். அதே மதிப்பு கொண்டது.
அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதாக இருக்கும். அரசு அச்சடிக்கும் பணத்துடன் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். டிஜிட்டல் வடிவில் இருப்பது மட்டுமே ஒரே வித்தியாசமாகும்.
கிரிப்டோகரன்சியும் அல்ல
அதே நேரத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (சிபிடிசி) கிரிப்டோகரன்சி அல்ல என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். எனினும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பாதுகாப்புடன் இயங்கும் வகையில், டிஜிட்டல் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சிக்கு 30% வரி
தனியார் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்குக் கடிவாளம் போடும் விதமாக, டிஜிட்டல் முறை சொத்து பரிமாற்றங்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக 1 சதவீதப் பரிவர்த்தனை வரியும் விதிக்கப்படுகிறது.
ஏன் டிஜிட்டல் நாணயம்?
மக்களின் பரிமாற்ற வசதிக்காகவும் பிற பாதுகாப்புக் குறைவான தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தைத் தடுக்கவும் டிஜிட்டல் ரூபாய் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல கிரிப்டோகரன்சி உள்ளிட்ட தனியார் மெய்நிகர் பணப் பரிமாற்றத்துக்கு செக் வைக்கவும், அரசே டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்கிறது.
இதன்மூலம் பிட்காயின் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகள் மூலம் பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவை நடைபெறாமல் தடுக்கப்படும். அதேபோல கோடிக்கணக்கில் செலவு செய்து, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தேவையும் குறையும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும்.
ஹேக்கிங் ஆபத்து
டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட உள்ள பிளாக்செயின் தொழில்நுட்பம் பாதுகாப்பானதுதான் என்றாலும், ஒருவேளை அது ஹேக் செய்யப்பட்டால், ஹேக்கர்களால் அதிக அளவிலான பணத்தைத் தங்களின் கணக்குகளுக்கு நொடியில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைய வாய்ப்புள்ளது.
9 வங்கிகளில் அறிமுகம்
இந்திய ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, எச்டிஎஃப்சி, யெஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட 9 வங்கிகளில் முதல்கட்டமாக டிஜிட்டல் நாணயப் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எல்லோரும் பயன்படுத்தலாமா?
மக்களவையில் டிஜிட்டல் நாணயம் குறித்து அறிவிக்கப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, இன்று நவம்பர் 1ஆம் தேதி நாடு முழுவதும் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மொத்த விற்பனையில் டிஜிட்டல் நாணயங்கள் பயன்படுத்தப்படும். ஒரு மாதத்துக்குள் சில்லறை வகைப் பிரிவில் குறிப்பிட்ட இடங்களில் டிஜிட்டல் நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும்.
கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயத்தை அரசே வெளியிடுவது தொடர்பாக நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)