PMVVY: மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம்; விண்ணப்பிக்க மார்ச் 31ம் தேதியுடன் காலகெடு நிறைவு - முழு விவரம் உள்ளே
PMVVY: பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா என்பது மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமாகும். மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் உத்தரவாத ஓய்வூதியம் வழங்குவதற்காக பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
பிரதான் மந்திரி வயா வந்தனா:
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முழு உரிமையும் வழங்கப்பட்டுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்.ஐ.சி மூலம் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் வாங்கலாம். குறைந்தபட்ச நுழைவு வயது 60 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானத்தின் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு மார்ச் 31 ஆக உள்ள நிலையில், இத்திட்டத்தை மேலும் நீட்டிக்க எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், நீட்டிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வூதியம்:
மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 1,000 ஓய்வூதியம் பெறலாம். அதிகபட்ச ஓய்வூதியத் தொகை மாதத்திற்கு ரூ.10,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முதலீட்டு வரம்பு ரூ .1.5 லட்சம் முதல் ரூ .15 லட்சம் வரை உள்ளது, மேலும் மொத்தம் 10 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.இந்த திட்டம் ஏப்ரல் 1 முதல் முடிவடையும் என்பதால், முதலீட்டாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள இது கடைசி வாய்ப்பாகும்.