NPS Calculator: மாதம் ஒரு லட்ச ரூபாய் ஓய்வூதியம் வேண்டுமா? அப்ப நீங்க செய்யவேண்டியது இதுதான்..
NPS Calculator: தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ஒரு லட்ச ரூபாய் ஈட்ட செய்ய வேண்டியது என்ன, என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
NPS Calculator: தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ஒரு லட்ச ரூபாய் ஈட்ட, நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டம்:
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) 2004ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மாற்றாக புதிய ஓய்வூதியத் திட்டம் (என்.பி.எஸ்) அரசால் தொடங்கப்பட்டது. இதில், ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும். அதைதொடர்ந்து தனியார் துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான மக்களுக்காகவும் அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியது.
இதில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் பலனை யார் வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் ஓய்வுக்குப் பிறகு நல்ல ஓய்வூதியத்தைப் பெற இப்போது எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
ஓய்வுக்குப் பிறகு வருமானத்தைத் தீர்மானிக்கும் வசதி:
புதிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மூலம், ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கான வருமானத்தைத் தீர்மானிக்கலாம். NPS என்பது பங்குச் சந்தையின் செயல்திறனின் அடிப்படையில் ஓய்வூதியத்திற்காக சேமிக்க உதவும் ஒரு அரசு திட்டமாகும். முன்னதாக அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆனால் 2009 முதல் இது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைக்கிறது. ஓய்வு காலத்துக்காகச் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதும், ஓய்வூதிய முறையை மேம்படுத்துவதும் இதன் நோக்கம்.
ஓய்வு காலத்திற்கான பெரிய நிதி:
அரசாங்கத்தால் நடத்தப்படும் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) முற்றிலும் உங்கள் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், வேலை செய்யும் போது உங்கள் சொந்த ஓய்வூதியக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். படிப்படியாக, டெபாசிட் செய்யப்பட்ட பணம் உங்கள் ஓய்வு காலத்திற்கான பெரிய நிதியாக மாறும்.
இந்த நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவீர்கள். NPS ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது.
எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்?
இந்த திட்டத்தில் எந்த வயதில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறோம் என்பதை பொறுத்து, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கான அதிகப்படியான ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் பெற, இப்போது எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அதை எப்படி என்பதை இங்கே அறியலாம்.
- நீங்கள் 35 வயதில் தொடங்க வேண்டும், முதலீடு ஆண்டுதோறும் 10% அதிகரித்து 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்.
- 80% நிதியை ஆண்டிற்கு 6 சதவிகித வருவாய்க்காக பயன்படுத்தினால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.17,000 பங்களிக்க வேண்டும்.
- கார்பஸ் தொகையில் 40% தொகையை ஆண்டுத் தொகைக்கு பயன்படுத்த, மாதாந்திர பங்களிப்பு ரூ. 34,000 தேவை.
- மேற்குறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஓய்வுக்குப் பிறகு மாத வருமானம் ரூ.1 லட்சமாக இருக்கும்.
NPS திட்டத்தில் வரி விலக்கு
18 முதல் 70 வயது வரை உள்ள எந்த இந்தியரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) பயன்படுத்திக் கொள்ளலாம். ஓய்வுக்குப் பிறகு வருமானத்தை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
இதில் முதலீடு செய்யும் போது வரி விலக்கு பலனையும் பெறுவீர்கள். வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுவதைத் தவிர, NPS இல் முதலீடு செய்வது, பிரிவு 80CCD இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் வரிச் சலுகையின் பலனை வழங்குகிறது.