இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் குற்றம் - சட்டம் என்ன சொல்கிறது?
ஒருவர் இறந்தபின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பின் நம்பர் செலுத்தி, பணம் எடுப்பது சட்டத்திற்குப் புறம்பானது. இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் இறந்த பின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பின் நம்பர் செலுத்தி, பணம் எடுத்துக் கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. ஒருவர் இறந்த பின், அவரது இறப்பு குறித்து வங்கிக்குத் தகவல் தெரிவிக்காமல், அவரது குழந்தைகள் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுத்துக் கொண்டு, பிறகு வங்கியிடம் அவரது இறப்பு குறித்து தகவலைத் தந்தாலும் அது குற்றமாகக் கருதப்படும். மேலும், சட்டப்பூர்வமான வாரிசு யார் என்ற மோதலுக்கும் இது வித்திட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுப்பது என்பது வங்கியையும், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளையும் ஏமாற்றுவதற்குச் சமமாகக் கருதப்படும். இப்படியான நிலை ஏற்படுமானால், இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தால், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பிறர் பயன்படுத்தினால், அவர் மீது வழக்குத் தொடுக்கலாம். இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையில் யாராவது ஒருவர் பணம் முழுவதுமாக எடுத்துக் கொண்டால், மற்றொரு வாரிசு இதுகுறித்து புகார் அளிக்கலாம். இதற்காக வங்கிக் கணக்கு விவரங்கள், முடிந்தால் சிசிடிவி வீடியோ காட்சிகள், வங்கிக் கணக்கு வைத்திருந்தவரின் இறப்புச் சான்றிதழ், பணம் வெளியில் எடுக்கப்பட்ட போது யாரிடம் ஏடிஎம் கார்ட் இருந்தது என்பதற்கான சான்று முதலானவற்றை வைத்து காவல்துறையில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். கொடுக்கப்படும் புகாருக்கு ஏற்ப, இந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் வழங்கப்படும்.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அவர் சேமித்த பணத்தைச் சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளும் விதிமுறைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. இதற்காக இறந்தவர் தனிக்கணக்கு வைத்திருந்தாரா அல்லது இன்னொருவருடன் இணைந்து கூட்டாக வங்கிக் கணக்கு வைத்திருந்தாரா என்று சரிபார்க்கப்படும். மேலும், வங்கிக் கணக்கு வைத்திருந்தவர் தனது மறைவுக்குப் பிறகு பணம் யாருக்குச் செல்ல வேண்டும் என்று நியமிக்கப்பட்டோர் குறித்த சரியான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்று வங்கியின் தரப்பில் சரிபார்க்கப்படும். இந்தக் காரணத்திற்காகவே, எதிர்பாராத விதமாக நிகழும் மரணங்களின் காரணமாக, குடும்ப உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன்பிறகு, வங்கிக் கணக்கு வைத்திருந்தவரின் மறைவு குறித்து வங்கிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் வடிவில் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் இறப்புச் சான்றிதழின் நகல், அவரின் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றையும் வங்கிக்குச் சமர்பிக்க வேண்டும்.
நாமினேஷன் செய்யாமல் கூட்டு வங்கிக் கணக்கை வைத்திருப்போரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் அந்த வங்கிக் கணக்கைத் தொடர விரும்பினாலும், இதே வழிமுறைகளைப் பின்பற்றலாம்.