National Monetisation Pipeline: 25 ஏர்போர்ட்... 400 ரயில்வே ஸ்டேஷன்...என்னவெல்லாம் விற்கிறார் நிதியமைச்சர் நிர்மலா?
பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கான இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. இந்த லிஸ்டில் என்னவெல்லாம் விற்கப்படுகிறது தெரியுமா?
பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்று அதன்மூலம் நாட்டின் வருவாயை அதிகரிப்பதற்கான தேசிய பணமாக்கல் திட்டத்தை (national monetisation pipeline)நேற்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வரும் ஆண்டுகளில் அரசின் வருவாயினை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்களைக்கொண்டு வருவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வழிமுறைகளைக்கொண்டுவருகிறது. இதன்படி பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்திய அரசின் பொதுச்சொத்துக்களை பணமாக்கலுக்கான புதிய திட்டத்தினை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு கழகம், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இவ்வாறு பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கான இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இதன் மூலம் நாட்டில் உள்ள புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்னவெல்லாம் விற்கிறார் நிதியமைச்சர் நிர்மலா?
இதன் அடிப்படையில் 1.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நெடுஞ்சாலைத்துறையின் 26700கி.மீ. அளவிலான சாலைகள். 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ரயில்வே துறையின் 400 ரயில்வே ஸ்டேஷன்கள். மின் பரிமாற்றத்துறையின் 0.67 லட்சம் கோடி ரூபாய் அளவிலான 42300 சர்க்யூட் மின் பரிமாற்றிகள். மின் உற்பத்தித்துறையின் 0.32 லட்சம் கோடி ரூபாய் அளவிலான 5000 மெகா வாட் மின் உற்பத்திகள். இயற்கை எரிவாயுத்துறையின் 0.24 லட்சம் கோடி ரூபாய் அளவிலான 8000 கிலோ மீட்டருக்கு அதிகமான இயற்கை எரிவாயு கெயில் குழாய்கள். 0.22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 4000 கிலோமீட்டர் அளவிலான ஐ.ஓ.சியின் பெட்ரோல் டீசல் குழாய்கள். 0.39லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான டெலிகாம் துறையின் 2.86 லட்சம் கிலோமீட்டர் அளவிலான பாரத் நெட் ஃபைபர்ஸ், பிஎஸ்.என்.எல் பங்குகள்.
0.29 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அரசுக் கிடங்குகள். சுரங்கத்துறையின் 0.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 160 கரிச்சுரங்கங்கள் 761 தாதுச்சுரங்கங்கள். 0.21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 25 விமான நிலையப் பங்குகள் மற்றும் 0.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 துறைமுகங்களின் 31 திட்டங்களின் பங்குகள். மேலும் 0.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு தேசிய மைதானங்கள் ஆகியன நிதியமைச்சர் விற்பனை செய்யும் பங்குகளில் அடங்கும்.
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விழாவில் நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கலந்துகொண்டார்.மேலும் இதில் பொதுத்துறை சொத்துக்களை விற்று பணமாக்குவதற்கான தேசிய பணமாக்கல் ஆதாரப்புத்தகமும் வழங்கப்பட்டது.
Also read: கல்லூரி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!