உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டுகளில் முதலிடத்தைப் பிடித்தது ‛தாஜ்’
தாஜ்னெஸ் என்ற புதிய வார்த்தையை சவுத்வால் பயன்படுத்தியிருக்கிறார். தாஜ்னெஸ் என்றால், தாஜ் ஓட்டலில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சுகமான அனுபவம் என்று பொருள்படும் வகையில் அவர் இதனைப் பயன்படுத்தியிருக்கிறார்.
உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டுகளில் டாடா குழுமத்தின் இந்திய ஹோட்டல் கம்பெனி லிமிடட் நிர்வாகத்தில் இயங்கும் தாஜ் ஓட்டல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2008 நவம்பர் 11க்குப் பின்னர் தாஜ் ஓட்டல் என்றாலே நமக்கு, அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் மும்பையில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல் தான் நினைவுக்கு வந்து செல்கிறது.
அந்த கோர நினைவை மாற்றும் வகையில், உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டுகளின் பட்டியலில் தாஜ் ஓட்டல் முதலிடத்தைப் பிடித்துள்ள சம்பவம் அமைந்துள்ளது.
38 இடத்திலிருந்து நம்பர்1
பிரிட்டனைச் சேர்ந்த, 'பிராண்டு பைனான்ஸ்' ( Brand Finance) எனும், பிராண்டுகளை மதிப்பிடும் நிறுவனம், அதன், '2021ல் 50 ஓட்டல்கள்' எனும் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், உலகின் மதிப்பு வாய்ந்த மற்றும் வலிமையான ஓட்டல்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், ஒட்டுமொத்த பிராண்டு வலிமை குறியீட்டில், 100க்கு 89.3 மதிப்பெண் பெற்று, 'தாஜ்' ஓட்டல் முதலிடத்தை பெற்றுள்ளது. தாஜ் ஓட்டலின் பிராண் மதிப்பு 2,200 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல், பிராண்ட் மதிப்பில், ட்ரிபிள் A எனும் மிகச் சிறப்பான தரத்தைப் பெற்றுள்ளது.
கடந்த, 2016ம் ஆண்டில், 38வது இடத்தில் இருந்த தாஜ் ஓட்டல், இப்போது, தரவரிசைப் பட்டியலில், முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்க்கெட்டிங் முதலீடு, வாடிக்கையாளர் பரிச்சியம், ஊழியர்களின் திருப்தி, கார்ப்பரேட் அடையாளம் ஆகியனவற்றின் அடிப்படையில் பிராண்ட்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
இது குறித்து, 'பிராண்டு பைனான்ஸ்' நிறுவனத்தின் சிஇஓ டேவிட் ஹை கூறுகையில், "தாஜ் ஓட்டல் நுாற்றாண்டு பாரம்பரியம் மிக்கது. இந்தியா என்றால் விருந்தோம்பல் அதன் அடையாளம். விருந்தோம்பல் துறையின் பாதுகாவலாக தாஜ் இருக்கிறது. சர்வதேசப் பயணிகளின் மதிப்பீட்டில், முதலிடத்திற்கு தாஜ் வந்துள்ளது" என்றார்.
இந்தியா ஹோட்டல்ஸ் கம்பெனியில் சிஇஓவும், நிர்வாக இயக்குநருமான புனீத் சத்வால் கூறும்போது, "உலகின் வலிமையான ஓட்டல் பிராண்டாக தாஜ் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது எங்களின் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கான அடையாளம், சாட்சி. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் அயராது ஒரேமாதிரியான சேவையை நல்கும் எங்களது ஊழியர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். உலகத் தரமான சேவையை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். தாஜ் ஓட்டல் வாடிக்கையாளர்கள் தாஜ்னெஸ்ஸை ( Tajness) என்றென்றும் அனுபவிப்பார்கள்" என்றார்.
அதென்ன தாஜ்னெஸ்!
தாஜ்னெஸ் என்ற புதிய வார்த்தையை சவுத்வால் பயன்படுத்தியிருக்கிறார். தாஜ்னெஸ் என்றால், தாஜ் ஓட்டலில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சுகமான அனுபவம் என்று பொருள்படும் வகையில் அவர் இதனைப் பயன்படுத்தியிருக்கிறார்.
டாப் 5 ஓட்டல்கள் எவை?
உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டுகளில் நம் நாட்டின் தாஜ் முதலிடம் பிடித்திருக்க அமெரிக்காவின் பிரீமியர் இன் 88.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஸ்பெயினின் மெலியா மூன்றாவது இடத்தையும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மற்றொரு ஓட்டலான என்எச் ஓட்டல் குரூப் 4 வது இடத்தையும் ஹாங்காங்கின் ஷங்ரி லா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.