GST Council Meeting: நாடே எதிர்பார்ப்பு..! இன்சூரன்ஸ் வரி குறையுமா? டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
GST Council Meeting: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
GST Council Meeting: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டெர்ம் இன்சூரன்ஸ் மீதான வரி நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டம் நடைபெற உள்ளது. அதன் முடிவ்ல் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சில முடிவுகள் மக்களின் வரிச்சுமையை குறைத்தாலும், சில முடிவுகள் கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தலாம். ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம். அதேநேரம், ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மலிவாக மாறும் டேர்ம் இன்சூரன்ஸ்?
டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் பாரம்பரிய ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளிலிருந்து சற்றே வித்தியாசமானவை. மரண பலனைத் தவிர வேறு நன்மைகள் எதையும் வழங்குவதில்லை. பாலிசி காலத்தில் பாலிசிதாரருக்கு எதுவும் நடக்கவில்லை என்றால், அதுவரை செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது. இந்த வகையான பாலிசிகள் ஆயுள் காப்பீட்டில் முழுமையாக ஈடுபட்டுள்ளன. மேலும் கூடுதல் பலன்களை வழங்காது. எனவே, டேர்ம் இன்சூரன்ஸ்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸில் ஜிஎஸ்டி முற்றிலும் விலக்கப்பட்டால், பிரீமியங்கள் மலிவாகிவிடும். சாதாரண மக்களின் நிதிச்சுமை ஓரளவு குறையும்.
மருத்துவ காப்பீடுகளுக்கு விலக்கு இல்லையா?
அதேநேரம், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஜிஎஸ்டியின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருக்கலாம். ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் மீதான வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதன் மூலம், இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தை கையில் எடுத்து ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரி சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றன.
ரூ.2000 டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரையிலான சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பேமெண்ட் திரட்டிகளுக்கு (Payment Aggregator) 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கும் திட்டத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது. Payment Aggregator என்பது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகும். தற்போது, PA நிறுவனங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை பேமெண்ட் கேட்வே கட்டணத்தை வசூலிக்கின்றன. GST விதிக்கப்பட்டால், PAக்கள் தங்கள் வரிச்சுமையை வணிகர்களுக்கு மாற்றும் வாய்ப்பு அதிகம் என்பதே பிரதான அச்சுறுத்தலாக உள்ளது.
முன்னதாக, 2016 ஆம் ஆண்டில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது, டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும், ரொக்கத்திலிருந்து ரொக்கமில்லா பொருளாதாரத்திற்கு படிப்படியாக மாறுவதற்கும் ரூ.2,000-க்குள் கார்ட் வாயிலாக பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட சேவை வரியை மத்திய அரசு கைவிட்டது குற்ப்பிடத்தக்கது.