GST Collection September 2021: செப்டம்பர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,17,010 கோடி... தமிழ்நாட்டில் 21% அதிகரிப்பு!
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பர் 2020ல் 6,454 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2021 செப்டம்பரில் 21% அதிகரித்து 7,842 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது
2021 செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,17,010 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.20,578 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.26,767 கோடியும், ஐஜிஎஸ்டி ஆக ரூ.60,911 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.29,555 கோடி உட்பட) மற்றும் செஸ் வரியாக ரூ.8,754 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.623 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
ஐஜிஎஸ்டி யிலிருந்து வழக்கமான பட்டுவாடாவாக மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.28,812 கோடியும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.24,140 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான பட்டுவாடாக்களுக்குப் பிறகு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மொத்த வருவாய், செப்டம்பர் 2021ல் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.49,390 கோடியும் மாநில ஜிஎஸ்டியாக ரூ.50,907 கோடியும் கிடைத்துள்ளது.
2021 செப்டம்பர் மாத வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயைவிட 23% அதிகம் ஆகும். கடந்தாண்டு இதே மாதத்தில் கிடைத்ததைவிட, இந்த மாதத்தில் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 30% அதிகம் (revenues from import of goods) மற்றும் உள்நாட்டு பரிவர்தனை (Domestic Transaction of Goods) மூலம் கிடைக்கும் வருவாய் (சேவை இறக்குமதி உட்பட) 20% அதிகமாகும்.
செப்டம்பர் 2019ல் ரூ.91,916 கோடி வருவாய் கிடைத்த நிலையில் 2020 செப்டம்பரிலேயே அதைவிட 4% அதிக வருவாய் கிடைத்தது. எனவே, தற்போதைய ஜிஎஸ்டி வருவாய், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தின் போதும்/ தொற்று காலத்தின் போதும் வசூலிக்கப்பட்ட தொகையை விட அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்கையில், " நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் சராசரி ரூ.1.15 லட்சம் கோடி, இது ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்த மாதாந்திர வசூலான ரூ.1.10 லட்சம் கோடியை விட 5% அதிகமாகும். இது நாட்டின் பொருளாதாரம் வேகமாக எழுச்சிபெற்றுவருவதை தெளிவாக உணர்த்துகிறது. பொருளாதார வளர்ச்சியுடன், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், குறிப்பாக போலி ரசீது தயாரிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது. வருவாய்க்கான இந்த சாதகமான போக்கு தொடர்வதுடன் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்யும்" என்று கூறப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தன் காரணமாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பர் 2020ல் 6,454 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2021 செப்டம்பரில் 21% அதிகரித்து 7,842 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
மாநிலம் | செப்டம்பர் 2020 | செப்டம்பர் 2021 | வளர்ச்சி விகிதம் |
மகாராஷ்டிரா | 13,546 | 16,584 | 22% |
ஓடிஸா | 2,384 | 3,326 | 40% |
குஜராத் | 6,090 | 7,780 | 28% |
தமிழ்நாடு | 6,454 | 7,842 | 21% |
கேரளா | 1,552 | 1,764 | 14% |
ஆந்திரப் பிரதேசம் | 2,141 | 2,595 | 21% |
உத்தரப் பிரதேசம் | 5,075 | 5,692 | 12% |
மத்தியப் பிரதேசம் | 2,176 | 2,329 | 7% |
மேற்கு வங்கம் | 3,393 | 3,778 | 11% |
கர்நாடகா | 6,050 | 7,783 | 29% |
மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான இழப்பீடாக ரூ.22 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும், வாசிக்க:
Political Legacy of Mahatma Gandhi : காந்தியின் சிந்தனைகளும், முரண்பாடுகளும் என்றுமே வாழும்!