Diwali Bonus: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிரடி தீபாவளி பரிசு; வெளியான அறிவிப்பு!
2024- 25ஆம் நிதி ஆண்டில் 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான தொகை, தீபாவளி போனஸாக வழங்கப்பட உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. இந்த போனஸ், துர்கா பூஜை மற்றும் தசரா பண்டிகைகளுக்கு முன்னதாக வழங்கப்படும் ஒரு வருடாந்திர நடைமுறையாகும்.
இதனடிப்படையில் 2024- 25ஆம் நிதி ஆண்டில் 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான தொகை, தீபாவளி போனஸாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கெஸட்டில் அல்லாத சுமார் 10.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB):
இதற்காக சுமார் 1,865 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதன்படி ஒவ்வொரு ஊழியருக்கும் அதிகட்சமாக 17,951 ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
யார் யார் பயனடைவார்கள்?
இந்த போனஸ் மூலம் டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (கார்டுகள்), நிலைய மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள், பாயின்ட்ஸ்மேன், அமைச்சக ஊழியர்கள் மற்றும் பிற குரூப் 'சி' ஊழியர்கள் உட்பட பல தரப்பு ஊழியர்கள் பயனடைவார்கள்.
ரயில்வே ஊழியர்களின் செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது உற்பத்தித்திறனை மேலும் மேம்படுத்த ஒரு ஊக்கத்தொகையாக செயல்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2024-25 நிதியாண்டில் இந்திய ரயில்வே 1,614.90 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதுடன், கிட்டத்தட்ட 7.3 பில்லியன் பயணிகளையும் ஏற்றிச் சென்றுள்ளது.
பீகாரில் முக்கிய ரயில் மற்றும் சாலை திட்டங்கள்:
இந்த தீபாவளி போனஸுடன், பீகாரில் 104 கி.மீ. பக்திபூர்பூர்- ராஜ்கிர்- திலையா ஒற்றை ரயில்வே பாதையை இரட்டிப்பாக்கும் ரூ.2,192 கோடி திட்டத்திற்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த பாதை, ராஜ்கிர், நாலந்தா மற்றும் பாவாபுரி போன்ற முக்கிய சுற்றுலா மற்றும் புனித யாத்திரை மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.






















