Gold Rate: அந்நியன் போல் ஆட்டம்; காலையில் குறைந்து மாலையில் எகிறிய தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி
தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை கடந்திருந்த நிலையில், இன்று காலை சற்று குறைந்து, 80 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. ஆனால், மிதியம் மீண்டும் விலை உயர்ந்து 80 ஆயிரத்தை கடந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்திலிருந்து உயர்ந்து, 80 ஆயிரத்தை கடந்ததால் மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை சற்று விலை குறைந்ததால், சவரன் 80 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. சரி அப்படியே விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மதியமே மீண்டும் விலை உயர்ந்து, மறுபடியும் 80 ஆயிரத்தை கடந்ததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
உச்சத்திலேயே நிற்கும் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2-ம் தேதி கிராம் 9,725 ரூபாய்க்கும், ஒரு சவரன் 77,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 3-ம் தேதி விலை உயர்ந்து ஒரு கிராம் 9,805 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78,440 ரூபாய்க்கும் விற்பனையானது.
4-ம் தேதி மிகச்சிறிய அளவில் விலை குறைந்து ஒரு கிராம் 9,795 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 5-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,865 ரூபாய்க்கு, ஒரு சவரன் தங்கம் 78,920 ரூபாய்க்கும் விற்பனையானது.
பின்னர் 6-ம் தேதி பெரும் அதிர்ச்சி தரும் சம்பவமாக கிராம் 10 ஆயிரத்தையும், சவரன் 80 ஆயிரத்தையும் கடந்து பேரதிர்ச்சி அளித்தது. அதன்படி, அன்று கிராம் 10,005 ரூபாய்க்கும், சவரன் 80,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை என்ன.?
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலையில் நீடித்த தங்கம், இன்று(08.09.25) காலை கிராமிற்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,970 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 79,760 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இதனால் மக்கள் சற்று ஆறுதலடைந்திருந்த நிலையில், மதியம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, மதியம் கிராமிற்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 10,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 80,480 ரூபாயாக எகிறியது.
வெள்ளியின் விலையும் புதிய உச்சம்
தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி கிராம் 137 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 4-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், 5-ம் தேதி ஒரு ரூபாய் விலை குறைந்து 136 ரூபாயாக இருந்தது. ஆனால், 6-ம் தேதி 2 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 138 ரூபாயாக ஆனது. பின்னர் நேற்றும் அதே விலையில் நீடித்தது.
அதைத் தொடர்ந்து, இன்று கிராமிற்கு 2 ரூபாய் விலை உயர்ந்த வெள்ளி கிராம் 140 என்ற உச்ச விலையை தொட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
தங்கமும் வெள்ளியும் இப்படி போட்டி போட்டு விலை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.





















