Gold Rate 9th April: பாத்தியா.. உன் வேலைய காட்டிட்டியே.. இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை...
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 1,480 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று இரண்டு முறை விலை உயர்ந்த நிலையில், மீண்டும் 67 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மீண்டும் வேலையை காட்டிய தங்கம் விலை
தங்கத்தின் விலை திடீரென பெருமளவில் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் மட்டும் 2,000 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை, சவரன் 66,480 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், 6-ம் தேதியும் அதே விலையில் நீடித்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்க நாளான 7-ம் தேதி, மீண்டும் 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,285 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 66,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 8-ம் தேதியான நேற்றும் கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,225 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 65,800 ரூபாய்க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த சூழலில், தங்கம் விலை தொடர்ந்து குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று(09.04.25) ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி, இன்று காலை சவரனுக்கு 520 ரூபாயும், மதியத்தில் 960 ரூபாயும் என இரு முறை விலை உயர்ந்தது, சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு மொத்தமாக 185 ரூபாய் விலை உயர்ந்து 8,410 ரூபாயை எட்டியது. ஒரு சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்து, சவரன் மீண்டும் 67 ஆயிரம் ரூபாயை கடந்து, 67,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்து அதிர்ச்சி
இந்நிலையில், 114 ரூபாயிலிருந்து படிப்படியாக குறைந்து 102 ரூபாயை எட்டிய வெள்ளியின் விலையும் இன்று ஒரே நாளில் 2 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 104 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 70 டாலர்கள் அதிகரித்ததால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ, தங்கம் தொடர்ந்து விலை குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்துள்ளதால், தங்கம் தன் வேலையை காட்டிவிட்டதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் வர்த்தப் போரால், இன்னும் எவ்வளவு விலை உயருமோ என மக்கள் மீண்டும் அச்சமடையத் தொடங்கியுள்ளனர்.

