Elon Musk: ட்விட்டர் சண்டை! என்னவேணாலும் நடக்கலாம்! டெஸ்லா பங்குகளை விற்றுத்தீர்க்கும் எலான்!
ட்விட்டருக்கும், எலான் மஸ்குக்கும் இடையேயும் சட்டப்போராட்டம் நடந்து வருகிறது.
டெஸ்லா என்ற கார் நிறுவனத்தின் ஓனர் என்ற தொடக்கப்புள்ளியிலேயே நமக்கெல்லாம் எலான் மஸ்க் அறிமுகம். உலகில் எத்தனையோ கார் நிறுவனங்கள் உள்ளன. அனைத்துக்கும் ஓனர் உண்டு. ஆனால் எலான் மஸ்க் வெறும் கார் கம்பெனியின் ஓனர் அல்ல. அவரது திட்டம் அடுத்து.. அடுத்து.. என மேலே மேலே சென்றுகொண்டே இருக்கிறது. தானியங்கி கார், ஸ்பேஸ் எக்ஸ், எதிர்காலத்துக்கான ரோபோ என பலத்திட்டங்களை கையில் வைத்திருக்கும் எலான், தற்போது சொந்தமாக ஒரு ஏர்போர்ட்டையே உருவாக்க உள்ளாராம். எலோன் மஸ்க் தனது சொந்த தனியார் விமான நிலையத்தை டெக்சாஸில் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே ட்விட்டருக்கும், எலான் மஸ்குக்கும் இடையேயும் சட்டப்போராட்டம் நடந்து வருகிறது.
deep thot pic.twitter.com/0EcPd30QAs
— Elon Musk (@elonmusk) August 11, 2022
ட்விட்டர் பிரச்னை..
உலக பணக்காரர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்காக அண்மையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டாா். கடந்த ஏப்ரல் மாத பங்கு நிலவரப்படி 3,42,000 கோடி ரூபாய் (44 பில்லியன் அமெரிக்க டாலா்) மதிப்பில் ட்விட்டரை முழுமையாக வாங்குவதற்கு ஒப்பந்தமானது. அதற்கு முன்பே ட்விட்டரின் அதிகபட்ச ஷெரை எலான் மஸ்க்தான் வைத்திருந்தார். 9 சதவீத பங்குகளை வைத்திருந்த எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்தாா். அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ட்விட்டா் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழுமையான புள்ளிவிவரம், புதிய போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிடவேண்டி எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தாா்.
ஆனால் ட்விட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவான போலி கணக்குகள் மட்டுமே இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. "இந்த எண்ணிக்கை நம்பும்படி இல்லை, இதற்கு உரிய தரவுகள் வேண்டும்" எனக் கூறி ஒப்பந்தத்தை மஸ்க் நிறுத்தி வைத்தாா். இந்தச் சூழலில் ட்விட்டா் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான மஸ்க் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அறிவித்தாா். இதனை தொடர்த்து மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது ட்விட்டர் நிறுவனம். ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராகவும் எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படி இருவரும் சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் டெஸ்லா பங்குகளையும் விற்கத் தொடங்கியுள்ளார் எலான்.
டெஸ்லா..
டெஸ்லாவில் ரூ.55ஆயிரம் கோடி பங்குகளை தற்போது விற்பனை செய்துள்ளார் எலான் மஸ்க். இதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்திலும் ரூ.67ஆயிரம் கோடிக்கான பங்குகளை எலான் விற்பனை செய்தார். தற்போது ட்விட்டருக்கும் எலானுக்கும் இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வரும்நிலையில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதால் தற்போது நல்ல விலைக்கு விற்றுவிட எலான் திட்டமிட்டதாக தெரிகிறது. ஒருவேளை வழக்கு எலானுக்கு எதிராக திரும்பினால் அந்த நேரத்தில் பங்குகள் விற்பனை நஷ்டத்தைக் கொடுக்கலாம் என்று ப்ளான் செய்தே எலான் தற்போது இந்தவேலையில் ஈடுபட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது.