பனங்கருப்பட்டி தூள் தெரியுமா? ஐ.டி வேலையை விட்டுட்டு கருப்பட்டி காய்ச்சும் பட்டதாரி இளைஞர்
Palm Products : தூத்துக்குடி மட்டுமில்லாம, வெளி மாவட்டங்கள்ல உள்ள வாடிக்கையாளர்களுக்கும் நேரடியா, பனை சர்க்கரை விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.
பனங்கருப்பட்டி தெரியும்... பனை கருப்பட்டி சர்க்கரை தூள் தெரியுமா-ஐ.டி வேலையை விட்டுட்டு கருப்பட்டி காய்ச்சும் பட்டதாரி இளைஞர்.
பனை சர்க்கரை தூள்
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரை கொப்பரையில் காய்ச்சி... கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகிய பொருள்கள் தயார் செய்வதுதான் நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த தொழில்முனைவோர் கண்ணன், புதிய முயற்சியாக, நவீன தொழில்நுட்பத்தை (ஸ்டீம் முறை) பயன்படுத்தி, பதநீரில் சர்க்கரை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இதற்கு மக்களிடம் அதிக வரவேற்புள்ளது. இது, பனை சர்க்கரை எனவும், தூள் கருப்பட்டி எனவும் அழைக்கப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் இயங்கி வரும் அவருடைய தொழிற்கூடத்தில் நவீன இயந்திரம் மூலம் கொதிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருந்த பதநீரில் இருந்து பதநீர் வாசம் மூக்கை துளைச்சிது.ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட பனை சர்க்கரையை, சல்லடையால் சலித்துச் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்டீம் மூலம் கருப்பட்டி தயாரிப்பு
இது குறித்து கண்ணனிடம் கேட்டபோது,பதநீர்ல இருந்து தயார் செய்யப்படும் கருப்பட்டி கெட்டியா இருக்குறதுனால, அதைத் தூளாக்கி பயன்படுத்துறதை மக்கள் சிரமமா நினைக்குறாங்க. அது, பால்ல கரையுறதுக்குக் கொஞ்சம் கூடுதல் நேரமாகும். ஸ்டீம் முறையில, நான் தயார் செய்யக்கூடிய பனை சர்க்கரை, வழக்கமான வெள்ளைச் சர்க்கரை மற்றும் நாட்டுச்சர்க்கரை மாதிரியே சீக்கிரத்துல கரைஞ்சிடும்.
இதைக் கையாளுறது ரொம்ப எளிது. இப்பவுள்ள அவசர யுகத்துல, மக்கள் மத்தியில இதுக்கு அதிக வரவேற்பு இருக்கு. சத்தான பொருளை சாப்பிடணும்... ஆனா, அது எளிதாவும் இருக்கணும்ங்கறதுதான் இப்பவுள்ள மக்களோட மனநிலை. அதுக்கு, மிகவும் உகந்தது, பனை சர்க்கரை என சிறு அறிமுகத்தை கொடுத்தார்.
ஐ.டி டூ கருப்பட்டி தூள்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் எங்களுக்கு சொந்த ஊரு எங்க தாத்தா வந்து பனைல இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காட்சி விற்பனை செஞ்சாரு. ஆனால் எங்க அப்பா பணத்தொழில விட்டுட்டு விவசாயத்தில் இறங்கிட்டாரு. நான் பி படிச்சிட்டு சென்னையில ஒரு ஐடி கம்பெனில வேலை பாத்துட்டு இருந்தேன்.எங்க குலதெய்வ கோயில்ல சாமி கும்பிடுறதுக்காக போனேன்.
எங்க குலதெய்வ கோயிலுக்குப் பக்கத்துல உள்ள ஒரு தோட்டத்துல பனை மரங்களைச் சிலர் வெட்டிக்கிட்டு இருந்தாங்க. பனைய வெட்டிக்கிட்டு இருந்தாங்க ஏன் வெட்டுறீங்கன்னு கேட்டேன். அப்ப அவர் சொன்னாரு இந்த தோட்டத்துல நிலக்கடலை போட்டேன்,ஆனா காட்டுப் பன்றிகக கூட்டம் வந்து நிலக்கடலை செடிய நாசமாக்கிட்டு போயிடுது. இதுல பனை மரங்களில் இருந்து விழுற பனம் பழத்தை சாப்பிடுவதற்காகவும் பன்றிகள் அதிகமா வருது. அதனால இந்த பனைமரத்தை வெட்டிக்கிட்டு இருக்கோம் அப்படின்னு சொன்னாரு. அப்புறம் சொன்னாரு நீங்க வேணா நுங்கு வெட்டிக்கோங்க, பதநீர் இறக்கிகோங்க, ஆனா பணம் பழம் மட்டும் கீழே விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள், அப்படின்னு சொன்னாரு. நானும் யோசிச்சேன் சரின்னு சொல்லிட்டேன்.
பனையை வெட்டியதில் துவங்கிய கருப்பட்டி தொழில்
ஆனா, அங்கவுள்ள பனை மரங்கள்ல இருந்து பதநீர் இறக்கிக்கோங்கன்னு அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை யோசிக்க வச்சுது.ஏற்கெனவே வேலைப் பார்த்துக்கிட்டுயிருந்த ஐ.டி கம்பெனியில பணிப்பளுவும் அதிகமா இருந்ததுனால, அந்த வேலையை விட்டுட்டு பதநீர் இறக்கி, கருப்பட்டி காய்ச்ச ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் பாரம்பர்ய முறைப்படி அடுப்புல நெருப்பு மூட்டி, கொப்பரையில கருப்பட்டி காய்ச்சி விற்பனை செஞ்சுக்கிட்டு இருந்தேன். வள்ளியூர்ல சாலையோரத்துல கூடாரம் அமைச்சு, அதை விற்பனை செஞ்சேன். ஓரளவு லாபம் கிடைச்சுது. கீழே விழுந்த பனம்பழங்களைச் சேகரிச்சு, அதை விதைப்பு செஞ்சு, பனங்கிழங்கு உற்பத்தி பண்ணி, அதையும் விற்பனை செஞ்சேன்.
அந்த நேரத்துலதான் கிள்ளிக்குளம் வேளாண்மை தொழில்முனைவோர் மையத்துல நடந்த ஸ்டீம் முறையில பனை சர்க்கரை தயாரிக்கும் பயிற்சியில கலந்துகிட்டேன். இது ரொம்ப எளிமையான முறையாக இருந்ததுனாலயும், இதுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கும்ங்கற நம்பிக்கை ஏற்பட்டதுனாலயும், இதை உற்பத்தி செய்றதுக்கான நடவடிக்கைகள்ல இறங்கினேன்.
வள்ளியூரை விடத் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்லதான் பனைமரங்கள் அதிகம். இந்தப் பகுதிகள்ல உள்ள பனைத் தொழிலாளர்களிடம் இருந்து பதநீரை விலைக்கு வாங்கி இங்கனையே பனை சர்க்கரை தயார் செய்யலாம்னு என் அப்பாவும், மனைவியும் சொன்னாங்க. என்னோட தொழிலுக்கு இந்த ஊர் பல வகைகள்லயும் சாதகமா இருந்துச்சு. அதனால, இங்க தொழிற்கூடத்தைத் தொடங்கி ரெண்டு வருஷமா ஸ்டீம் முறையில பனை சர்க்கரை தயார் பண்ணி விற்பனை செஞ்சுட்டு வர்றேன் என்றார்.
தயாரிப்பு முறை
இதன் தயாரிப்பு முறை குறித்து விவரித்தார்.பனை மரத்துல இருந்து பதநீர் இறக்கியதும், பனந்தோட்டத்திலேயே வடிகட்டித்தான் பனைத் தொழிலாளர்கள் இங்க கொண்டு வந்து கொடுப்பாங்க. அதை மேலும் வடிகட்டி தூய்மைப் படுத்துறதுக்காக, இங்கவுள்ள பில்டர் மெஷின்ல அந்தப் பதநீரை ஊற்றுவோம். பதநீர்ல கலந்துள்ள சிப்பிச் சுண்ணாம்பு வெளியேற்றப்படும்.வடிகட்டப்பட்ட பதநீரை, கலன்ல ஊற்றி 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைப்போம். இப்படிக் கொதிக்க வெச்சு, காய்ச்சும்போது எஞ்சியிருக்கிற சுண்ணாம்பும் பிரியும். அந்தப் பதநீரை மறுபடியும் பில்டர் மெஷின் மூலம் வடிகட்டி, கலன்ல ஊற்றி காய்ச்சுவோம். கூப்பனி பதம் வரும் வரை காய்ச்சணும். அந்தப் பதம் வர 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். கூப்பனி பதத்திற்கு வந்ததும் அதை, ஸ்டீம் இயந்திரத்துல ஊற்றி, நீராவி மூலம் கொதிக்க வைப்போம்.
சரியான பதத்துக்கு வரும் வரை கூப்பனி காய்ச்சப்படும். 1 மணி நேரத்துல அந்தப் பதம் வந்துடும். அதுக்குப் பிறகு, பெரிய எஃகு ட்ரேக்கள்ல ஊற்றி உலர வச்சு, தூளாக்கி, சல்லடையில மூணு முறை நல்லா சலிச்சுத் தூய்மைப்படுத்தினால், தரமான பனை சர்க்கரை தயார் என்கிறார்.
கருப்பட்டி காபிக்கு கிடைத்த வரவேற்பை சாதகமாக்கிய கண்ணன்
சமீப காலமா இயற்கை பொருளுக்கு பொதுமக்களிடையே ஒரு பெரிய வரவேற்பு இருந்திச்சி. குறிப்பா பார்த்தீங்கன்னா சீனி காபிக்கு பதிலா கருப்பட்டி காப்பி, வழக்கமா பாத்தீங்கன்னா கருப்பட்டி தேங்காய் சிரட்டை மாதிரி இருக்கும். அத டீக்கடை காபி கடையில தூளாக்கி தான் பயன்படுத்தனும் என்கிற ஒரு நிலை இருந்துச்சி. ஆனா இங்க விற்பனை செய்யக்கூடிய பனை சர்க்கரையை, அப்படியே பயன்படுத்தலாம். காபி மற்றும் பால்ல இதைக் கலந்தா, உடனே கரைஞ்சிடும். இதனால் டீக்கடைகள், உணவகங்கள்ல மட்டுமல்லாமல், வீடுகள்லயும் பனை சர்க்கரையை ரொம்ப விரும்பி வாங்குறாங்க.
ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரைதான் பதநீர் இறக்கும் சீசன். இந்த அஞ்சு மாசங்கள்ல மட்டும்தான் பதநீர் கிடைக்கும். போன வருஷம் பனை சீசன்ல 3,000 கிலோ பனை சர்க்கரை உற்பத்தி பண்ணினேன். ஒரு கிலோ 600 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலம், 18,00,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சுது. இதுல பதநீருக்கான விலை, எரிபொருள், வேலையாள் கூலி, போக்குவரத்து உள்பட மொத்தம் 14,00,000 ரூபாய் செலவு போக கைப்பிடித்தம் இல்லாம ஓரளவு போச்சி. இப்போ கிட்டத்தட்ட 30 பேர் வேலை பார்க்காங்க, பதநீர் 300 பேர்ட்ட வாங்கினோம். இப்போ பதநீர் சீசனும் முடிவடைய உள்ள நிலையில் பதநீர் வரத்தும் குறைஞ்சிருக்கு என கூறும் இவர், இந்த ஸ்டீம் முறையில கருப்பட்டித்தூள் உற்பத்தியை ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகுது. ஆரம்ப நிலையிலதான் இன்னும் இருக்கோம். அதனாலதான் செலவு அதிகம். உற்பத்தியை அதிகப்படுத்தினா, செலவு குறையும். இது போதுமான லாபம் இப்போ இல்ல என கூறும் இவர் தற்போது ரூ 50 லட்சம் வரை வியாபாரம் நடக்கிறது. இதுவே ஆண்டுக்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமாகும் போது தான் லாபத்தை எதிர்பார்க்க முடியும், தற்போதைய சூழலில் வங்கி கடன் அது இதுன்னு போயிட்டு இருக்கு, அதிகமாகும் போது லாபமும் கிடைக்கும் என்றார்.
ஆறுமுகனேரி டூ அமேசான் ஆன்லைன் வரை
தூத்துக்குடி மட்டுமில்லாம, வெளி மாவட்டங்கள்ல உள்ள வாடிக்கையாளர்களுக்கும் நேரடியா, பனை சர்க்கரை விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். சூப்பர் மார்க்கெட்டுகள், இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்புறேன். அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்றேன் என்கிறார்.