Digital University | ‛வீட்டிலேயே உலகத்தரக் கல்வி... வருகிறது டிஜிட்டல் பல்கலைக்கழகம்’ அறிவித்தார் நிதியமைச்சர்!
இந்திய மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதன் உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில் உருவாக்கப்படும்.
இந்திய மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதன் உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8- 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இன்று (பிப்.1) மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அதில், ''1 முதல் 12ஆம் வகுப்பு கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு பிரதமர் இ-வித்யா (PM E-Vidhya) திட்டம் மூலம் 200 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல, இந்திய மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதன் உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ''இந்திய மாணவர்களின் வீட்டிலேயே உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும் வகையில், டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஐஎஸ்டிஇ தரத்தின் அடிப்படையில் இந்தப் பல்கலைக்கழகம் இருக்கும். இதற்கான உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும். தலைசிறந்த பல்கலைக்கழககங்களும் அரசு கல்வி நிறுவனங்களும் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்'' என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.