(Source: ECI/ABP News/ABP Majha)
TN Budget 2023: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு... சென்னை அண்ணாசாலையில் குறையப்போகும் டிராஃபிக்...!
சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் நெடுஞ்சாலை துறையின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
- முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1,407 கோடி செலவில் 148 கி.மீ. சாலைகள் 4 வழி சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் 524 கி.மீ. ரூ.803 கோடி செலவில் இருவழி சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வரும் ஆண்டில் ரூ.621 கோடி செலவில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டு பொறியியல் குழுவினர் ஆலோசனைகள் பெறப்பட்டு சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பாதைகளுக்கு மேல் கட்டப்படும் இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் துறை சாதனையாக அமையும். இந்த பணிகளால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
- பருவமழை மற்றும் வெள்ளத்தின் போது போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அண்ணா சாலை மேம்பாலம்
சென்னையில் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அண்ணா சாலை திகழ்கிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், சாலையில் அண்ணா மேம்பாலம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மேலும் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை வழியாக பல இடங்களுக்கும் செல்லலாம் என்பதால் எப்போதும் டிராஃபிக் பிரச்சினையால் இந்த சாலைகள் திணறும். இதனால் இப்பகுதில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்