Defence Budget 2024: உள்நாட்டு ஆயுத தயாரிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் பாதுகாப்பு துறையின் எதிர்பார்ப்புகள் என்ன?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றதால், கடந்த பிப்ரவரி மாதம், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. மோடி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், நாளை முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாதுகாப்பு துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
புவிசார் அரசியல் காரணமாக உலகளவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பட்ஜெட்டில் மற்ற துறைகளை காட்டிலும் பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, வியூக ரீதியான தொழில்நுட்பத்தில் தற்சார்புடன் இயங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நிதியாண்டான 2023-24இல் பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.25 லட்சம் கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23 நிதியாண்டில் ஆயுதங்களை நவீனமயமாக்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
உள்நாட்டு ஆயுத தயாரிப்பு திட்டத்திற்கு அதிக நிதி: கடந்த நிதியாண்டை விட, இடைக்கால பட்ஜெட்டில் 6 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, 1.62 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் 57 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து L&T நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், "புதிய ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம் உள்ளது. அதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட் ஒதுக்கீட்டை 2 சதவீதமாக உயர்த்த வேண்டும்" என்றார்.
பாதுகாப்பு துறைக்கான எதிர்பார்ப்புகள் குறித்து பேசிய டாரல் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாரத் கீதி, "சர்வதேச எல்லைகளில் நம் ராணுவம் பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில், ஒரு விரிவான பாதுகாப்பு உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தை ஆதரிப்பது முக்கியம்.
நமது பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்குவதில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பட்ஜெட்டைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமானது" என்றார்.