முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
இந்தியாவில் வால்வோவின் புதிய EX90 மற்றும் ES90 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, இந்திய சந்தையில் தனது இரண்டு புதிய பிரீமியம் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது.
வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி மற்றும் வால்வோ ES90 எலெக்ட்ரிக் செடான் ஆகிய இரு மாடல்களும் 2026, அக்டோபர் 12 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பம், சொகுசான கேபின், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர ரேஞ்ச் ஆகியவற்றுடன் இவை பிரீமியம் பிரிவில் வெளியாகின்றன.
முழு எலக்ட்ரிக் வாகனம்
வால்வோவின் புகழ்பெற்ற XC90 மாடலுக்கு மாற்றாக, முழு எலெக்ட்ரிக் வாகனமாக EX90 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் வழக்கமான இன்ஜின் கிரில்லுக்குப் பதிலாக மூடப்பட்ட அமைப்பு மற்றும் வால்வோவின் தனித்துவமான தார்ஸ் ஹேமர் எல்.இ.டி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. விண்ட்ஸ்க்ரீனுக்கு மேல் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளுக்கான சென்சார் மற்றும் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் பிரீமியமான உட்புற கேபினில் 14.5 இன்ச் கூகுள் அடிப்படையிலான வெர்டிகல் டச் ஸ்க்ரீன், காரின் முக்கிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. உலகளாவிய சந்தையில் இது 7 சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது. இதில் 92 kWh மற்றும் 106 kWh என இரு பேட்டரி தேர்வுகள் உள்ளன. 106 kWh பேட்டரி கொண்ட டியூவல் மோட்டார் வேரியண்ட் 608 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும்.

விலை என்ன?
அடுத்ததாக, S90 மாடலின் எலெக்ட்ரிக் வாரிசாக ES90 செடான் வருகிறது. மூடிய முன்பக்க கிரில், தார்ஸ் ஹேமர் விளக்குகள் என ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்ட இந்த 5-சீட்டர் சொகுசு காரில், அதிக இடவசதி மற்றும் பெரிய பூட் ஸ்பேஸ் உள்ளது. இதன் 92 kWh பேட்டரி 664 கி.மீ ரேஞ்சையும், 106 kWh பேட்டரி 696 கி.மீ ரேஞ்சையும் வழங்கும். அதாவது முழு சார்ஜில் கிட்டத்தட்ட 700 கி.மீ வரை பயணிக்கலாம். இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ ரேஞ்ச் மற்றும் துல்லியமான விலை விவரங்கள் காரின் அறிமுகத்தின் போதே அறிவிக்கப்படும்.
இந்த மாடல்களில் 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் கீ, 5G கனெக்டிவிட்டி, OTA அப்டேட்கள், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், பனோரமிக் கிளாஸ் ரூஃப், 360 டிகிரி கேமரா, பவர்டு சீட்கள், ஆட்டோ பார்க் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய சொகுசு அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் லெவல்-3 ADAS தொழில்நுட்பம் மற்றும் நவீன சென்சார்கள் உள்ளன.
EX90 மாடலில் உள்ள 800V எலக்ட்ரிக்கல் ஆர்க்கிடெக்சர் மற்றும் அதிக கம்ப்யூட்டிங் பவர் மூலம் சார்ஜிங், பாதுகாப்பு அமைப்புகள் மேம்பட்டுள்ளன. இந்தியாவில் EX90 மாடல், பிஎம்டபிள்யூ iX, மெர்சிடிஸ் பென்ஸ் EQS எஸ்.யு.வி கார்களுக்கும், ES90 மாடல் பிஎம்டபிள்யூ i5, மெர்சிடிஸ் EQS செடான் கார்களுக்கும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















