Toyota Land Cruiser: அட்வென்சர், கரடுமுரடான லுக், லேண்ட் க்ரூசர் FJ - மினி ஃபார்ட்சுனர் எப்போது அறிமுகம்?
Toyota Land Cruiser FJ: டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூசர் FJ (மினி ஃபார்ட்சுனர்) கார் மாடல் அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Toyota Land Cruiser FJ: லேண்ட் க்ரூசர் பெயரில் மிகவும் மலிவு விலையில் விற்பனைக்கு வரும் கார் மாடலாக இந்த FJ மாடல் இருக்கும் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூசர் FJ:
டொயோட்டா நிறுவனம் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தைக்கு புதிய மிட்-சைஸ் எஸ்யுவியை உருவாக்கி வருகிறது. இந்த கார் தனது பெயரில் லேண்ட் க்ரூசர் எனும் அடையாளத்தை தாங்கி நிற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் நடப்பாண்டு இறுதியிலேயே இந்த கார் மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, லேண்ட் க்ரூசர் FJ கார் மாடல் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டொயோட்டாவின் இந்த கார் மாடலானது கடந்த 2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட டீசர் மூலம் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, லேண்ட் க்ரூசர் மாடலிலேயே மிகவும் சிறிய அளவிலான காராக அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம், ஃபிளாக்ஷிப் மாடலான LC300, LC250 (பிராடோ) மற்றும் கிளாசிக் 70 சீரிஸ் ஆகியவற்றிற்கு இணையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. டீசரை தொடர்ந்து FJ என்ற பெயரை டொயோட்டா நிறுவனம் பதிவு செய்ததை தொடர்ந்து, லேண்ட் க்ரூசர் பெயருடன் FJ என்ற குறியீடும் இணைக்கப்படும் என தகவல்கள் தீவிரமாக பரவி வருகின்றன.
உற்பத்திக்கான பிலாட்ஃபார்ம்:
மிட்-சைஸ் எஸ்யுவி ஆன லேண்ட் க்ரூசர் FJ கார் மாடலானது லேடர் ஃப்ரேம் சேஸில் கட்டமைக்கப்பட்டு, IMV 0 பிளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதே தளத்தில் தான், சர்வதேச சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா ஹிலக்ஸ் சாம்ப் கார் மாடல் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு செலவுகளை குறைக்கும் நோக்கில் லேண்ட் க்ரூசர் 250 மற்றும் 300 சீரிஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட, TNGA-F பிளாட்ஃபார்மில் FJ கார் மாடல் உற்பத்தி செய்யப்படாது என கூறப்படுகிறது.
வடிவமைப்பு விவரங்கள்:
வெளிப்புற வடிவமைப்பு தொடர்பான பெரிய தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகாத நிலையில், டீசர் அடிப்படையில் இது பாக்ஸி வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. நவீன காலத்திற்கு ஏற்ற லைட்டிங் செட்-அப், அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ், வலுவான டயர்கள், பின்புறத்தில் இணைக்கப்பட்ட கூடுதல் டயர் ஆகியவை இடம்பெறும். அளவீடுகள் குறித்து பேசுகையில், லேண்ட் க்ரூசர் FJ கார் மாடலானது, 2,750 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் 4.5 மீட்டர் நீளம் இருக்கும். இது சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கொரோல்லா கிராஸ் மாடலை பிரதிபலிக்கிறது. எஸ்யுவி சந்தையில் இது டொயோட்டாவின் ஃபார்ட்சுனருக்கு கீழே நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்:
மினி ஃபார்ட்சுனரில் 2.7 லிட்டர் 2TR-FE நான்கு சிலிண்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 161 bhp சக்தி மற்றும் அதிகபட்சமாக 246 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன், நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றலை கடத்தக்கூடிய 4-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது. கூடுதலாக, குறிப்பிட்ட சில சந்தைகளுக்கு மட்டும் ஹைப்ரிட் பவர்-ட்ரெயின் ஆப்ஷனை வழங்கவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் எப்போது? விலை?
மினி ஃபார்ட்சுனரின் இந்திய அறிமுகம் குறித்து பேசுகையில், அதுதொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், உலகின் மிகப்பெரிய மூன்றாவது ஆட்டோமொபைல் சந்தையை, டொயோட்டா நிறுவனம் நிச்சயம் தவறவிடாது என கூறப்படுகிறது. இதனிடையே, ஃபார்ட்சுனர் கார் மாடலின் விலை தாறுமாறாக எகிறி வரும் நிலையில், நடுத்தர கார் பிரியர்களை ஈர்க்க லேடர் ஃப்ரேம், கட்டுமஸ்தான வடிவமைப்பு மற்றும் 4 WD திறனுடன் கூடிய மலிவு விலை மினி ஃபார்ட்சுனர் என்பது நல்ல வெளியீடாக இருக்கும். சென்னையில் ஃபார்ட்சுனரின் ஆந்ரோட் விலை ரூ.4.76 லட்சத்தில் தொடங்கி ரூ.65.16 லட்சம் வரை நீள்கிறது.





















