Toyota Fortuner & Legender: வந்தாச்சு மைல்ட் ஹைப்ரிட் - ஃபார்ட்சூனர், லெஜண்டர் கார்களில் கூடுதல் மைலேஜ், விலை
Toyota Fortuner & Legender Hybrid: மிதமான ஹைப்ரிட் அம்சத்துடன் கூடிய ஃபார்ட்சுனர் மற்றும் லெஜண்டர் கார் மாடல்களை டொயோட்டா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Toyota Fortuner & Legender Hybrid: டொயோட்டா நிறுவனத்தின் மிதமான ஹைப்ரிட் அம்சத்துடன் கூடிய ஃபார்ட்சுனர் மற்றுனம் லெஜண்டர் கார் மாடல்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
டொயோட்டாவின் மைல்ட் ஹைப்ரிட் கார்கள்:
டொயோட்டா நிறுவனம் மைல்ட் ஹைப்ரிட் கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி, தற்போது ஃபார்ட்சுனர் மற்றும் லெஜண்டர் கார் மார் மாடல்களின், 48V மைல்ட் ஹைப்ரிட் வேரியண்ட்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய டீசல் - மின்சார இணையானது அசிஸ்ட் அடிப்படையிலான ஹைப்ரிட் செட்-அப்பை கொண்டுள்ளது. இதில் ஃபார்ட்சுனர் கார் மாடலின் விலை ரூ.44.72 லட்சமாகவும், லெஜண்டர் கார் மாடலின் விலை ரூ.50.09 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹைப்ரிட் அமைப்பு செயல்படும் விதம்:
நியோ ட்ரைவ் கான்ஃபிகரேஷன் ஆனது, டொயோட்டாவின் 2.8 லிட்டர் டர்போ சார்ஜ்ட் 4 சிலிண்டர் ஜிடி சீரிஸ் டீசல் இன்ஜினை, பெல்ட் இண்டகிரேடட் ஸ்டார்டர் ஜெனரேடர் மற்றும் காம்பேக்ட் லித்தியம் - அயன் பேட்டரி உடன் இணையாக்குகிறது. வாகனத்தின் வேகத்தை குறைக்கும்போது இழக்கும் ஆற்றலை ரிஜெனரேட்டிங் பிரேக்கின் மூலம் அறுவடை செய்து, மீண்டும் அமைப்பிற்குள் அனுப்பி ஆக்சிலரேஷனை எளிதாக்கவும், குறைவான வேகத்தில் பயணிக்கும்போது வெளிப்படும் உமிழ்வுகளை குறைக்கவும் இந்த மைல்ட் ஹைப்ரிட் அமைப்பு உதவுகிறது.
புதிய வேரியண்ட்களில் உள்ள புதிய அம்சங்கள் என்ன?
வாகனம் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும்போது இன்ஜினை ஆன்/ஆஃப் செய்ய ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 48V அம்சமானது சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஃபார்ட்சுனர் மற்றும் ஹிலக்ஸ் கார் மாடல்களில் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில் ஃபார்ட்சுனர் தற்போது இந்திய சந்தைக்கு வர, ஹிலக்ஸ் மாடலும் விரைவில் உள்நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. வெவ்வேறு மேற்பரப்புகளுக்கு ஏற்றவாறு பவர் டெலிவெரி, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பிரேக்கிங் இன்புட்களை மாற்றி அமைக்கும் மல்டி-டெரெயின் செலக்ட் சிஸ்டம் இதிலும் தொடர்கிறது.
கூர்மையான பாடி ஸ்டைலிங், இரட்டை நிற வண்ண ஆப்ஷன்கள், ஸ்ப்லிட் எல்இடி முகப்பு விளக்குகள் லெஜண்டரில் அப்படியே தொடர, ஃபார்ட்சுனரிலும் வெளிப்புறத்தில் எந்தவித பெரிய மாறுபடும் இன்றி அப்படியே தொடர்கிறது. அதேநேரம், இரண்டு வேரியண்ட்களிலும் 360 டிகிரி கேமரா இணைக்கப்பட்டுள்ளதோடு, வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ்ங் வசதி மைல்ட் ஹைப்ரிட் வேரியண்டில் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. சாஃப்ட் டச் பேனல்ஸ் உள்ளிட்ட உட்புற அம்சங்கள் அப்படியே மாற்றங்களின்றி தொடர, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு உட்புறம் அதிக இடவசதியுடன் தொடர்கிறது.
பாதுகாப்பு உள்ளிட்ட இதர அம்சங்கள்:
மின்மயமாக்கல் இருந்தாலும், லாங் ஹாலிங் திறன் மற்றும் சேஸ் ஆயுள் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. பாதுகாப்பிற்காக 7 ஏர் பேக்குகள், ட்ராக்ஷன் மற்றும் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் எமர்ஜென்சி பிரேக்கிங் ஃபியூட்சர்ஸ் ஆகியவை அடிப்படை அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. இதுபோக வேக அடிப்படையிலான டோர் லாக்குகள், முன்புற சீட்பெல்ட் ப்ரி-டென்சனர்ஸ் மற்றும் குழந்தைகள் இருக்கை ஆங்கர் சிஸ்டம் ஆகியவையும் தொடர்கிறது.
டெலிவெரி எப்போது?
நியோ ட்ரைவ் 48V ஃபார்ட்சுனர் மற்றும் லெஜண்டர் கார் மாடல்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஜுன் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து இந்த கார்களின் விநியோகம் தொடங்கப்பட உள்ளது. இரண்டு கார்களுக்கும் 8 வருடங்கள் வரையிலான நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் குறைந்த மாதத் தவணை திட்டங்கள், ப்ரீ-அப்ரூவ்ட் அப்கிரேட்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டிகள் அடங்கும். வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ரோட்-சைட் அசிஸ்டன்ஸ்களை பெறுவார்கள். விருப்பத் தொகுப்புகள் மூலம் உத்தரவாதக் காப்பீட்டை ஐந்து ஆண்டுகள் அல்லது 2.2 லட்சம் கிலோமீட்டர் வரை நீட்டிக்க முடியும். எரிபொருள் திறன் ஆதாயங்கள் சுமார் 10 சதவிகிதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















