Model YL: 6 சீட்டில் அருமையான டெஸ்லா மாடல் ஒய்எல்; ஒரே சார்ஜில் 680 கி.மீ. மைலேஜ்- இந்தியாவில் அறிமுகம்
Tesla Model YL: புதிய பரிமாணத்தில் டெஸ்லா மாடல் YL: 6 இருக்கைகள் கொண்ட கார் 2026-ல் இந்தியாவில் அறிமுகம்! இதோ முழு விவரம்!

எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெஸ்லா நிறுவனம், தனது மிகவும் பிரபலமான மாடல் ஒய் காரின் புதிய 6 சீட்டர் வேரியண்ட்டை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
மாடல் ஒய்எல் (Model YL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வாகனம், வரும் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி உலக அளவில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் சாதனை
தற்போதைய மாடல் ஒய் கார் உலக அளவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக சாதனை படைத்துள்ளது. இது 5 இருக்கைகளுடன் விற்பனையில் உள்ள நிலையில், பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற வகையிலும், சொகுசான பயண அனுபவத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் இந்த 6 சீட்டர் மாடல் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதில் இடம்பெற்றுள்ள 'L' என்ற எழுத்து நீளமான வீல்பேஸை குறிக்கிறது. முந்தைய மாடலை விட இது அளவில் சற்றுப் பெரியதாக வடிவமைக்கப்படுவதால், காருக்குள் தாராளமான இடவசதி கிடைக்கும். குறிப்பாக, மூன்று வரிசைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாத சொகுசான பயணம் உறுதி செய்யப்பட உள்ளது.
ஒரே சார்ஜில் 680 கி.மீ. ரேஞ்ச்
காரின் வெளிப்புறத் தோற்றத்தில் பெரிய அளவிலான மாறுதல்கள் இருக்காது என்றாலும், உட்புறத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது. மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக் மூலம், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் முந்தைய மாடல்களை விடக் கூடுதல் தூரம் பயணிக்கும் திறனை இது பெற்றிருக்கும். குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் வகையில், 680 கி.மீ. ரேஞ்சை அளிக்கும் என்று வாகனத் துறை வட்டாரங்கள் கணிக்கின்றன.
சீனா உள்ளிட்ட ஆசியச் சந்தைகளில் 6 இருக்கைகள் கொண்ட எஸ்.யு.வி கார்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குள்ள உள்ளூர் நிறுவனங்களின் சவாலை எதிர்கொண்டு தனது விற்பனையைத் தக்கவைக்கவே டெஸ்லா இந்த மாடலைக் களமிறக்குகிறது.
குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய மாடல் ஒய்எல் கார் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























