Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
Mahindra XEV 9S 6 Seater EV: மஹிந்த்ரா நிறுவனம் தனது பிரபலமான மின்சார எஸ்யுவி ஆன XEV 9S-ன் 6 சீட்டர் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Mahindra XEV 9S 6 Seater EV: மஹிந்த்ரா நிறுவனத்தின் XEV 9S-ன் 6 சீட்டர் எடிஷன், மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மஹிந்த்ரா XEV 9S-ன் 6 சீட்டர் எடிஷன்..!
மஹிந்த்ரா நிறுவனம் தனது XEV 9S மின்சார எஸ்யுவியின் லைன் - அப்பை விரிவுபடுத்தும் விதமாக, புதிய 6 சீட்டர் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டாவது வரிசை பயணிகளுக்கும் தனித்தனியான கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கான்ஃபிகரேஷன் கொண்ட XEV 9S-ன் 6 சீட்டர் எடிஷனானது பேக் டூ அபோவ், பேக் த்ரீ மற்றும் பேக் த்ரீ அபோவ்ஆகிய வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது குடும்ப பயணங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
XEV 9S-ன் 6 சீட்டர் - விலை விவரங்கள்
| வேரியண்ட் | விலை (எக்ஸ் - ஷோரூம்) |
| பேக் டூ அபோவ் 70KWh | ரூ.25.25 லட்சம் |
| பேக் டூ அபோவ் 79KWh | ரூ.26.15 லட்சம் |
| பேக் த்ரீ 70KWh | ரூ.28.05 லட்சம் |
| பேக் த்ரீ அபோவ் 79KWh | ரூ.30.15 லட்சம் |
XEV 9S-ன் 6 சீட்டர் - இருக்கை விவரம்
புதிய எடிஷனில் வழக்கமான பெஞ்ச் இருக்கைக்குப் பதிலாக இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு, இரண்டு இருக்கைகளுக்கு இடையில் ஒரு பாதையை ஏற்படுத்துவதால், மூன்றாவது வரிசை இருக்கைக்குச் செல்வது எளிதாகியுள்ளது. XEV 9S சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், தற்போது உள்ளூரில் அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
இரண்டாவது வரிசை இருக்கைகளில் தனித்தனி ஆர்ம்ரெஸ்ட்கள் இருப்பதால், அவற்றை மடித்து கூடுதல் இடவசதியை உருவாக்கலாம். கேப்டன் இருக்கைகளால் கிடைக்கும் விசாலமான தரைப்பரப்பு, மூன்றாவது வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் கால்களை வசதியாக நீட்டி அமர வழிவகுத்து ஒட்டுமொத்த சௌகரியத்தை மேம்படுத்தும். பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் இரட்டை 65W USB சார்ஜிங் போர்ட்கள் போன்ற வசதிகள், 7-இருக்கை மாடல்களில் இருந்து அப்படியே கொண்டுவரப்பட்டுள்ளன.
XEV 9S-ன் 6 சீட்டர் - வெளிப்புற டிசைன்
6 சீட்டர் வெளிப்புற டிசைனில் XEV 9S-ன் ஸ்டேண்டர்ட் எடிஷனிலிருந்து எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. அதன்படி 4,737 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம், 1,747 மிமீ உயரம் மற்றும் 2,762 மிமீ வீல்பேஸ் கொண்டு மிகவும் விசாலமானதாக உள்ளது. 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டு கரடுமுரடான சாலைகளை கூட எளிதாக கடந்து செல்வதற்கு ஏற்றதாக உள்ளது. லக்கேஜ் கொள்ளளவு 527 லிட்டர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
XEV 9S-ன் 6 சீட்டர் - அம்சங்கள், வசதிகள்
கேபினை கவனத்தில் கொண்டால் மூன்று 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 5G கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், பவர் மற்றும் காற்றோட்ட வசதியுள்ள இருக்கைகள், பனோரமிக் ஸ்கைரூஃப், மூன்று-மண்டல க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன. உயர் ரக வேரியண்ட்களில் மஹிந்திராவின் VisionX ஆக்மென்டட்-ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா, லெவல் 2+ ADAS, பார்க் அசிஸ்ட், ப்ளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் கூடுதல் ட்ரைவர் அசிஸ்ட் செயல்பாடுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. XEV 9S வரிசையில் 'பேக் த்ரீ அபோவ்' முதலிடத்தில் உள்ளது. தனித்தனி கேப்டன் இருக்கைகள் பயணிகளுக்கு இடையே அதிக இடைவெளியை வழங்குவதோடு, லவுஞ்ச் டெஸ்க், ஸ்நாக் ட்ரே, விண்டோ சன்ஷேடுகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பின் இருக்கை காற்றோட்டம் போன்ற அம்சங்கள், பொருந்தக்கூடிய வேரியண்ட்களில் இரண்டாம் வரிசை இருக்கைகளின் சிறப்பம்சங்களை மேலும் கூட்டுகின்றன.
XEV 9S-ன் 6 சீட்டர் - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்
XEV 9S, மஹிந்திராவின் INGLO எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஒற்றை மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஸ்யுவி ஆனது 70 kWh மற்றும் 79 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 286 hp மற்றும் 380 Nm வரை ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 679 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என மஹிந்த்ரா அறிவித்துள்ளது. 79 kWh மாடல்கள் 180 kW வரையிலான DC சார்ஜிங்கை ஆதரிக்கின்றன. இதன் மூலம், 20 நிமிடங்களில் பேட்டரியை 20 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதமாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















