Kia Syros EV: ஃபைனலி.. கியாவின் சைரோஸ் மின்சார எடிஷன் சிக்கிருச்சு - என்னெல்லாம் இருக்கு? ரேஞ்ச் எவ்ளோ?
Kia Syros EV: கியா சைரோஸ் மின்சார எடிஷனின் சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Kia Syros EV: கியா சைரோஸ் மின்சார எடிஷன் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
கியா சைரோஸ் மின்சார எடிஷன்:
கியா நிறுவனத்தின் சைரோஸ் மின்சார எடிஷனின் சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதல்முறையாக இணையத்தில் கசிந்துள்ளன. இவை, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த கார், எப்படி இருக்கும் என்ற ஒரு ஆலோசனையை வழங்குகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி வெளியாகாவிட்டாலும், 2026ம் ஆண்டின் ஜனவரி தொடங்கி மார்ச் மாதத்திற்குள் கார் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இன்ஜின் எடிஷன்களுடன் சேர்த்து புதிய சைரோஸை கியா விற்பனை செய்ய உள்ளது. மின்சார எடிஷனின் விலை 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சைரோஸ் மற்றும் க்ளாவிஸ் மின்சார எடிஷன்கள் மூலம், நிறுவனத்தின் மொத்த விற்பனை, 2026ம் ஆண்டிற்குள் 50,0000 முதல் 60 ஆயிரம் யூனிட்களை எட்டும் என கியா கணக்கிட்டுள்ளது.
கியா சைரோஸ் வடிவமைப்பு விவரங்கள்
சாலை சோதனையின்போது காரின் தோற்றம் முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருந்தாலும், அது பாக்ஸி வடிவத்தை கொண்டிருப்பதை திட்டவட்டமாக உணர முடிகிறது. அரைகுறையாக தெரிந்த முகப்பு விளக்குகள், டெயில் லைட்கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை இது சைரோஸின் மின்சார எடிஷன் தான் என்பதை உறுதிபடுத்தின. மற்ற புகைப்படங்கள் மூலமாக, முன்புற க்ரில்லில் ஐடெண்டிகல் ரேடார் யூனிட் (ADAS அம்சத்தின் ஒரு அங்கம்), அவுட்சைட் ரியர்வியூ மிரர்ஸ், பார்கிங் சென்சார்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளதை காட்டுகின்றன.
இந்த காரில் ப்ரேக் கேலிபர்கள் லைம் க்ரீன் ஷேடில் முடிக்கப்பட்டுள்ளன. இது சர்வதேச சந்தையில் செயல்திறன் சார்ந்த EV9 GT போன்ற கார் மாடல்களுக்கு மட்டும் கியா நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தக்கது. சார்ஜிங் வசதியானது வலதுபுற ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளது.
கியா சைரோஸ் உட்புற அம்சங்கள்:
சைரோஸ் மின்சார எடிஷனின் உட்புற விவரங்கள் எதுவும் புகைப்படங்கள் மூலம் கிடைக்கவில்லை. ஆனாலும், இன்ஜின் எடிஷனில் உள்ள அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அப்படியே பின் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்கான 12.3 இன்ச் ஸ்க்ரீன்கள், பனோரமிக் சன்ரூஃப், ரிக்ளைனிங், ஸ்லைடிங், வெண்டிலேடட் இரண்டாவது வரிசை இருக்கைகள், லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா அமைப்பும் சைரோஸ் மின்சார எடிஷனில் வழங்கப்படலாம்.
கியா சைரோஸ் - பேட்டரி, ரேஞ்ச்
பேட்டரி உள்ளிட்ட புதிய மின்சார சைரோஸின் விவரங்கள் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை. அதேநேரம், இந்த எஸ்யுவியில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அம்சம் இருப்பதும், தனது K1 பிளாட்ஃபார்மை ஹுண்டாயின் இன்ஸ்டெர் மின்சார எடிஷனுடன் பகிர்வதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சைரோஸ் கார் மாடலானது ஹுண்டாயின் மின்சார கார்களின் 42KWh மற்றும் 49KWh பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறக்கூடும். இந்த ஆப்ஷன்களை கொண்டுள்ள ஹுண்டாயின் இன்ஸ்டர் முறையே 300 மற்றும் 350 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைரோஸ் இன்ஜின் எடிஷன்:
கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கியாவின் சைரோஸ் கார் மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எரிபொருள் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் மொத்தமாக, 13 வேரியண்ட்களில் கிடைக்கிறது. சென்னையில் இந்த காரின் ஆன் - ரோட் விலை 11.14 லட்சத்தில் தொடங்கி 21 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் லிட்டருக்கு, 17 முதல் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. சைரோஸ் ஆனது டாடா நெக்ஸான், மாருதி ப்ரேஸ்ஸா, ஹுண்டாய் வென்யு, மஹிந்திரா XUV 3XO கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.





















