Kia Cars: விறுவிறுன்னு ஏறி வரும் கியா.. 9 கார்களுமே சம்பவம் தான், SUV விற்பனையில் மிரட்டல்- டல்லடிக்கும் EV
Kia Cars Portfolio: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா கார் மாடல்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பதிவாகி வருகிறது.

Kia Cars Portfolio: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா கார் மாடல்களின் விற்பனை, ஜுலை மாதத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 8 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.
ஏறு முகத்தில் கியா:
தென்கொரியாவைச் சேர்ந்த கியா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவான போட்டியாளராக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு உதாரணமாக தான் ஜுலை மாத விற்பனையும் அமைந்துள்ளது. அதன்படி, கடந்த ஜுன் மாதம் விற்பனையான 20 ஆயிரத்து 625 யூனிட்களை காட்டிலும், 1910 யூனிட்கள் அதிகரித்து கடந்த ஜுலை மாதம் 22 ஆயிரத்து 135 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதேநேரம், கடந்த ஆண்டு ஜுலையில் விற்பனையான 20 ஆயிரத்து 507 யூனிட்களை காட்டிலும் கியா நிறுவனம் கடந்த ஜுலையில் 8 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கூடுதலாக கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் விற்பனையான ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 644 யூனிட்களை காட்டிலும், நடப்பாண்டில் அதே காலகட்டத்தில் 11.45 சதவிகித வளர்ச்சி கண்டு, கியாவின் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 439 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது இந்திய பயனாளர்களிடையே அந்நிறுவனம் ஈட்டி வரும் நம்பிக்கையை காட்டி வருகிறது.
கியா நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ:
கடந்த 2019ம் ஆண்டு செல்டோஸ் கார் மாடல் மூலம், இந்திய சந்தையில் கியா நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியது. அதைதொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த 3 மின்சார கார்கள் உட்பட 9 எஸ்யுவி கார் மாடல்கள் அந்நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கார் மாடலாக, அனைத்து அம்சங்களும் அடங்கிய முற்றிலும் மின்சார எடிஷனான EV9 திகழ்கிறது. இந்நிலையில் கியாவின் அனைத்து கார்களின் அடிப்படை விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
1. காரென்ஸ் க்ளாவிஸ் EV
கியா நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல் தான் காரென்ஸ் க்ளாவிஸ். 4 வேரியண்ட்கல்ளில் கிடைக்கும் இந்த காரின் ஆன் ரோட் விலை சென்னையில் ரூ.19.10 லட்சத்தில் தொடங்கி ரூ.25.90 லட்சம் வரை நீள்கிறது. 42KWh மற்றும் 51.4KWh ஆகிய இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 404 முதல் 490 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு பயணத்தை மேம்படுத்துகிறது. சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. கியா காரென்ஸ் க்ளாவிஸ்
கியாவின் 7 பேர் அமரும் வகையிலான எம்பிவியான காரென்ஸ் க்ளாவிஸ் கார் மாடலை அடிப்படையாக கொண்டே அதன் மின்சார எடிஷன் கொண்டு வரப்பட்டது. 24 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் ஆன் - ரோட் விலை சென்னையில், ரூ.14.21 லட்சத்தில் தொடங்கி ரூ.26.83 லட்சம் வரை நீள்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைப்பதோடு, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. இன்ஜின், எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த காரானது 15 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என கூறப்படுகிறது.
3. கியா சைரோஸ்
கியாவின் சோனெட் மற்றும் செல்டோஸ் கார் மாடல்களுக்கு இடையே, சப்-4 மீட்டர் கார் மாடலாக சைரோஸ் கார் மாடல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யுவி ஆனது மொத்தம் 13 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் பெற்றுள்ளது. இதன் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.11.14 லட்சம் முதல் ரூ.21.91 லட்சம் வரை நீள்கிறது. இன்ஜின், எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த காரானது 17 முதல் 21 கிலோ மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என கூறப்படுகிறது. இது பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. கியா செல்டோஸ்
இந்தியாவில் முதலாவதாக சந்தைப்படுத்தப்பட்ட கியாவின் கார் மாடல் செல்டோஸ் ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யுவி ஆனது உள்நாட்டு சந்தையில் 24 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் பெற்றுள்ளது. இதன் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.13.86 லட்சம் முதல் ரூ.25.71 லட்சம் வரை நீள்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் இந்த கார் பெரியவர்களுக்கு 3 ஸ்டார்களையும், சிறியவர்களுக்கு 2 ஸ்டார்களையும் பெற்றுள்ளது.
5. கியா சோனெட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் கார் மாடலாக சோனெட் உள்ளது. அதன்படி, சென்னையில் இதன் ஆன் ரோட் -விலை ரூ.9.47 லட்சத்தில் தொடங்கி ரூ.19.39 லட்சம் வரை நீள்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியார்பாக்ஸ்களை கொண்டு, மொத்தமாக 20 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 17 முதல் 21 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. ஆனாலும், நிறுவனம் சார்பில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக திகழ்கிறது.
6. கியா காரென்ஸ்
குடும்பங்களுக்கு ஏற்ற கியாவின் எம்பிவி ஆக காரென்ஸ் கார் மாடல் பயனர்களின் நம்பிக்கையை பெற்றது. ஆனால் இதன் மேம்படுத்தப்பட்ட எடிஷான காரென்ஸ் க்ளாவிஸ் சந்தைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, காரென்ஸின் பெரும்பாலான வேரியண்ட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு ப்ரீமியம் (O) வேரியண்ட் மட்டுமே, பெட்ரோல் மேனுவல் எடிஷனில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இதன் ஆன் ரோட் விலை ரூ.14.10 லட்சமாகும். இது லிட்டருக்கு கிட்டத்தட்ட 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதைனையில் இது 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
7. கியா கார்னிவெல்
முற்றிலும் கட்டமைக்கப்பட்ட கார் மாடலாக இறக்குமதி செய்யப்படுவதால், கார்னிவெல் கியாவின் மிகவும் விலையுயர்ந்த கார்களில் ஒன்றாக உள்ளது. விசாலமான இடவசதி மற்றும் சொகுசு பயணங்களுக்கு பெயர் போன இந்த கார் 8 பேர் வரையில் அமரும் வகையிலான இடவசதியை கொண்டுள்ளது. ஒரே ஒரு வேரியண்டில் டீசல் இன்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ள இந்த காரின் ஆன் ரோட் விலை சென்னையில் ரூ.79.67 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 13 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. விலைக்கு ஏற்ப அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு, 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
8. கியா EV6
கியாவின் க்ராஸ் ஓவர் எஸ்யுவி ஆன EV6 கார் மாடல், ப்ரீமியம் மாடலாக திகழ்கிறது. ஒரே ஒரு வேரியண்டாக விற்பனை செய்யப்படும் இந்த காரின் ஆன் ரோட் விலை, சென்னையில் ரூ.69.44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 84KWh பேட்டரி பேக்கை கொண்டு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் நிஜ உலகில் சுமார் 650 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. ADAS தொழில்நுட்பம், 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு, பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
9. கியா EV9
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் முதன்மையான கார் மாடலாக EV9 திகழ்கிறது. மூன்று வரிசை இருக்கை வசதிகளை கொண்ட, இந்த முழுமையான் மின்சார கார் ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷனை மட்டுமே கொண்டுள்ளது. 99.84KWh பேட்டரி பேக்கை கொண்டு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை கொண்டுள்ள, இந்த காரானது முழுமையாக் சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
எதிர்கால திட்டம்:
தற்போதைய சூழலில் கியாவின் இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவிக்கள் வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், உள்நாட்டு சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கியா, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மின்சார வாகன போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. தற்போதுள்ள மின்சார வாகனங்கள் அதிகப்படியான விலை காரணமாக பெரிய விற்பனையை பதிவு செய்வது இல்லை. எனவே, மலிவு விலை மின்சார கார்கள் மீது கியா கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.





















