Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
Kia Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து 5 ஹைப்ரிட் எஸ்யுவிக்களை சந்தைப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Kia Hybrid SUV: கியா நிறுவனம் இரண்டு ஹைப்ரிட் எஸ்யுவிக்களை வரும் 4 மாதங்களில் அடுத்தடுத்து சந்தைப்படுத்த உள்ளது.
கியா ஹைப்ரிட் எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 5 ஹைப்ரிட் எஸ்யுவிக்களை சந்தைப்படுத்த உள்ளதை கியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இவற்றில் இரண்டு மாடல்கள் நடப்பாண்டின் இறுதியிலேயே விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி, ப்ராண்டின் சொரெண்டோ ஹைப்ரிட் வரும் செப்டம்பர் 4ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவே கியா கார்னிவல் மாடலும் ஹைப்ரிட் வசதியை பெற உள்ளது. முதலீட்டாளர் நாள் கொண்டாட்டத்தில் பேசிய கியா தலைமை செயல் அதிகாரியான ஹோ சங் சாங், “சோனெட், காரென்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய மாடல்களும் 2029ம் ஆண்டு முடிவிற்குள் இந்திய சந்தையில் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை பெறும்” என உறுதியளித்துள்ளார்.
இந்திய சந்தைக்கு புதிய எஸ்யுவி:
மேலும், ”உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட B-செக்மெண்ட் மின்சார எஸ்யுவி 2029ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும்” எனவும் கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் ஏதும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆனால், இது முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி ஆக உருவாக்கப்பட்டு, ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவி சைரோஸ் மற்றும் செல்டோஸ் மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த மாடல் இன்ஜின் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளூரில் மாருதி விக்டோரிஸ் மற்றும் ஹுண்டாய் பேயோனுக்கு போட்டியாளராக நிலைநிறுத்தப்படலாம்.
கியா சொரெண்டோ ஹைப்ரிட் எஸ்யுவி
சொரெண்டோ எஸ்யுவி ஹைப்ரிட் மற்றும் டீசல் ஆகிய இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களிலும் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . நாட்டில் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் ஆப்ஷனை வழங்கும் கொரிய ப்ராண்டின் முதல் மாடல் என்ற பெருமையை பெற உள்ளது. புதிய சொரெண்டோ 7-சீட்டர், 1.6-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், ஒரு எலெக்ட்ரிக் மோட்டார், சிறிய பேட்டரி மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த பவர்ட்ரெய்ன் முறையே 238 பிஎஸ் மற்றும் 380 என்எம் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், இந்தியாவிற்கான மாடலின் முழுமையான விவரங்களை கியா இன்னும் வெளியிடவில்லை.
சொரெண்டோ ஹைப்ரிட் காரிலும் மெக்கானிக்கல் AWD சிஸ்டம் இடம்பெறும். ஆல்-வீல் சிஸ்டத்தை வழங்கும் கியாவின் முதல் இன்ஜின் அடிப்படையிலான SUV இதுவாகும். 9.0 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 196 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் கூறப்படுகிறது. கியா கார்னிவலில் உள்ள அதே 2.2-லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின் சொரெண்டோவில் இடம்பெற உள்ளது. இந்த இன்ஜின் 202 பிஎஸ் பவரையும் மற்றும் 441 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 8-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இதன் விலை 30 லட்சத்தில் தொடங்கி 50 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும்.
கியா கார்னிவல் HEV
தற்போதைய தலைமுறை கார்னிவல் ப்ரீமியம் MPV, 2024 முதல் நமது சந்தையில் டீசல் எடிஷனில் விற்பனையில் உள்ளது. குறிப்பிட்ட சில சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள கார்னிவல் ஹைப்ரிட் மாடலை கியா விரைவில் உள்ளூரில் அறிமுகப்படுத்த உள்ளது. உலகச் சந்தைகளில் விற்பனையில் உள்ள பல கியா மாடல்களில் காணப்படும் அதே 1.6-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை, பேரலல் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இது பயன்படுத்துகிறது. இதன் ஒருங்கிணைந்த பவர் மற்றும் டார்க் முறையே 272hp மற்றும் 367Nm ஆகும். இந்த இன்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் இதன் விலை 56 லட்சத்தில் தொடங்கி 75 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















