Hyundai Discount: எஸ்யுவிக்கு ரூ.7 லட்சம் தள்ளுபடி அறிவித்த ஹுண்டாய் - லிஸ்டில் i20, எக்ஸ்டர், வென்யு - முழு பட்டியல்
Hyundai Discount Nov: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நவம்பர் மாதத்தில் ஹுண்டாய் நிறுவன கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Hyundai Discount Nov: ஹுண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 மின்சார காருக்கு, நவம்பரில் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
ஹுண்டாய் ஐயோனிக் 5-க்கு ரூ.7 லட்சம் சலுகை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டய் நிறுவனம் தனது பல்வேறு கார் மாடல்களுக்கு, நவம்பர் மாதத்திற்கான பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, க்ராண்ட் i10 Nios, சப்காம்பேகேட் எஸ்யுவி ஆன எக்ஸ்டெர், i20 ஹேட்ச்பேக், வென்யு, அலகசார், ஐயோனிக் 5 மின்சார எஸ்யுவி ஆகிய கார்களின் மீது பயனர்கள் விலைக்குறைப்பு பலனை பெறலாம். கடந்த 2024ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஐயோனிக் 5 யூனிட்களை மொத்தமாக கையிருப்பில் இருந்து காலி செய்யும் நோக்கில், அதன் மீது ரூ.7.05 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேநேரம், 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த காரின் மீது ரூ.2.05லட்சம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒற்றை எடிஷனில் விற்பனை செய்யப்படும் இந்த முழு மின்சார காரின் விலையானது ரூ.46.05 லட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐயோனிக் 5 - ரேஞ்ச், பேட்டரி:
ஐயோனிக் 5 கார் மாடலில் 72.6KWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 631 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 217bhp மற்றும் 350Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. ரியர் வீல் ட்ரைவ் அம்சத்தையும் கொண்டுள்ளது. 10 முதல் 80 சதவிகித சார்ஜிங்கை வெறும் 18 நிமிடங்களில் எட்டக்கூடிய வகையிலான, சூப்பர்ஃபாஸ்ட் 800V சார்ஜர் வசதியையும் கொண்டுள்ளது.
ஐயோனிக் 5 - உட்புறம் & அம்சங்கள்:
ஹுண்டாய் ஐயோனிக் 5 காரானது குறைந்தபட்ச இன்டீரியர் டிசைனோடு தட்டையான ஃப்ளோர், நெகிழ்வுத்தன்மை கொண்ட இருக்கைகள், நகரக்கூடிய சென்ட்ரல் கன்சோல் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக்கை கொண்டு, ஃபேப்ரிக் மற்றும் லெதர் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அம்சங்கள் அடிப்படையில், இந்த மின்சார எஸ்யுவியில் 12.3 இன்ச் அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருக்காக இரண்டு டச் ஸ்க்ரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ADAS சூட், ஆகுமெண்ட் ரியாலிட்டி ஃபங்க்சன் கொண்ட ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, வெஹைகிள் டு லோட் ஃபங்க்சனாலிட்டி என பல்வேறு விதமான ப்ரீமியம் அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஹுண்டாயின் மற்ற கார்களுக்கான சலுகைகள்:
| கார் மாடல் | தள்ளுபடி |
| ஹுண்டாய் i20 | ரூ. 85,000 |
| ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் | ரூ.70,000 |
| ஹுண்டாய் எக்ஸ்டெர் | ரூ.70,000 |
| ஹுண்டாய் வென்யு | ரூ.60,000 |
| ஹுண்டாய் வெர்னா | ரூ.55,000 |
| ஹுண்டாய் அல்கசார் | ரூ.50,000 |
| ஹுண்டாய் ஆரா | ரூ.43,000 |
| ஹுண்டாய் டக்சன் | ரூ.25,000 |
ஹுண்டாயின் விற்பனை கடந்த மாதம் கடுமையாக சரிந்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த விற்பனையில் பின்னடைவை சந்தித்தது. அதனை ஈடுகட்டும் நோக்கிலும், பழைய உற்பத்தி மாடல்களை காலி செய்யும் விதமாகவும் நவம்பர் மாதத்தில் கார் மாடல்களின் சலுகைகளை அறிவித்துள்ளது.





















