Ford India: 1926 முதல் 2021 வரை.. சொகுசுக்காரன்... பவுசுக்காரன்... இது ஃபோர்டு வீழ்ந்த கதை!
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு உலகம் முழுவதும் கார்கள், லாரிகள், பஸ், டிராக்டர் முதலான வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு உலகம் முழுவதும் கார்கள், லாரிகள், பஸ், டிராக்டர் முதலான வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் சர்வதேச அளவில் ஈடுபட்டு வரும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது இருப்பைக் கடந்த 20 ஆண்டுகளாகப் பெருக்கி வந்தது.
1903ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹென்றி ஃபோர்டு வெறும் 12 தொழிலாளர்களுடன் தொடங்கிய இந்த நிறுவனம் இன்று உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் எட்டாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, 1988ஆம் ஆண்டு Ford Escort என்ற புகழ்பெற்ற காரை அறிமுகப்படுத்தியது. 1926ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கனடா நாட்டின் ஃபோர்டு நிறுவனத்தின் கிளையாக ஃபோர்டு இந்தியா நிறுவப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் இந்தியா அரசு அதிகாரிகள் ஃபோர்டு நிறுவனத்தை பம்பாய் நகரத்தில் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க அனுமதியளித்தனர்.
சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை உணர்த்தும் விதமாக ஃபோர்டு நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டுக்கு ராட்டை ஒன்றைப் பரிசாக அனுப்பினார். 1954ஆம் ஆண்டு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட கடுமையான இறக்குமதி சட்டங்களால் அப்போதைய ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டது. எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்த ஃபோர்டு, 1969ஆம் ஆண்டு, டிராக்டர்கள் உற்பத்தியைத் தொடங்கியது.
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்ட பிறகு, மீண்டும் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தது ஃபோர்டு. 1995ஆம் ஆண்டு, அரசு ஒப்புதலுடன் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து, மஹிந்திரா ஃபோர்டு இந்தியா லிமிடெட் துவங்கப்பட்டது. இந்நிறுவனம்,மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் ஃபோர்டு நிறுவனமும் தலா 50 சதவிகிதப் பங்குதாரர்களாகத் தொடங்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் ஃபோர்டு நிறுவனம் தனது பங்குகளை 92 சதவிகிதமாக உயர்த்தி, ஃபோர்டு இந்தியா லிமிடெட் என்ற நிறுவனமாக உதயமானது.
2001ஆம் ஆண்டு முதல், ஃபோர்டு நிறுவனம் தனது பிரத்யேக கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. Ford Ikon, Fusion, Fiesta, Mondeo, Endeavour ஆகிய கார்கள் இந்தியாவில் வெகு பிரபலம். சென்னைக்கு அருகில் மறைமலை நகரில் ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைக் கொண்டிருக்கிறது ஃபோர்டு நிறுவனம். மற்றொரு உற்பத்தி தொழிற்சாலை குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து விற்கவும், வெளிநாடுகளுக்கு கார் இன்ஜின்களை ஏற்றுமதி செய்யவும் இந்த நிறுவனங்களில் சுமார் 72 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை மேற்கொண்டது ஃபோர்டு.
இப்படியான வெற்றிகரமான சூழலில் பயணித்துக் கொண்டிருந்த ஃபோர்டு நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளது. சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்படும் மாருதி சுசுகி, ஹியுண்டாய் ஆகிய நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாததால் ஃபோர்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனம் மீண்டும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டாக கார் தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியது. எனினும், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. உற்பத்தியில் இருந்து வெளியேறினாலும், கார்களை முழுவதுமாகவும், பாகங்களாகவும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவால் ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றிய 4000 தொழிலாளர்கள் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது.