ஆனி திருமஞ்சனம்; திருவண்ணாமலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் விழா: பக்தர்கள் தரிசனம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த ஆனி திருமஞ்சன விழாவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த ஆனி திருமஞ்சன விழாவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
அதேபோன்று மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜைகள் மற்றும் மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் மதியம் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் விஷேசமானது. அதன்படி ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அதிகாலையில் நடைகள் திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று இரவு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் தொடர்ந்து இன்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பால்,தயிர், சந்தனம், பன்னீர்,உள்ளிட்ட சிறப்பு மூலிகைகளால் அபிஷேகம், நடைப்பெற்றது.
அதனைத்தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அரோகரா, அரோகரா, என்ற கோஷம் எழுப்பினர். பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களின் வெள்ளத்தில் ஆனந்த நடனமாடியபடி நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோவிலின் ஐந்தாம் பிரகாரம் வழியாக திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். மாடவீதி வழியெங்கிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

