ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா: அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நடந்த ஆலோசனை
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் ஆலய வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக திருவிழா நாளை (இன்று) துவங்க உள்ளதையடுத்த காவல்துறை மற்றும் அறநிலைத்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது .
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், வேணாட்டு அரசர் வீர ரவிவர்மாவால் திருப்பணிகள் செய்யப் பெற்று 1604-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றதாக கல்வெட்டுகள் கூறுகிறது. 418 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கோவில் கருவறை, மூலவர் சன்னதி, ஒற்றைக்கல் மண்டபம், உதய மார்த்தாண்ட மண்டபம், கொடிமரம், திருவம்பாடி கிருஷ்ணன் சன்னதி, ஸ்ரீதர்ம சாஸ்தா சன்னதி, மடப்பள்ளி, கோவில் வளாகங்கள் ஆகியவற்றில் விரிவான புனரமைப்புப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்று நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டது. தொடர்ந்துபரிகார பூஜைகள் நடந்தது.
41 நாட்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்காக ராம நாம ஜெபம் பூஜை நடந்து முடிந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக விழா பூஜைகள் இன்று தொடங்கியது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு நாராயணிய பாராயணம், மாலை 5 மணிக்கு ஆச்சரியவரணம், முளையிடல், பிரசாத சுத்தி, அஸ்த்ரகலச பூஜை, ராக்ஷோக்ன ஹோமம், வாஸ்து கலச ஹோமம், வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்யாகம் அத்தாழ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, மாலை 7 மணிக்கு சுரதவனம் முருகதாஸ் குழுவினரின் பக்தி இசை சொற்பொழிவு ஆகியன நடைபெற்றது.
தொடர்ந்து வரும் நாட்கள் பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான 6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம் உபதேவன்களுக்கு பிரதிஷ்டை, பஞ்சவாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 முதல் 5.50-க்குள் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6 மணி முதல் 6.50 மணி வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது.
மேலும் கொடிமரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட செப்புத்தகடுகள் மற்றும் கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட உள்ள கருவாழ்வார் சிலை பொருத்துவதற்கு வசதியாக சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை கூட்டம் திருவட்டார் தளியல் முத்தாரம்மன் கோவில் அன்னதானம் மண்டபத்தில் நடைபெற்றது. திருவட்டார் பேருராட்சி மன்ற தலைவி பெனிலா ரமேஷ், சிதறால் புலவர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கும்பாபிஷேகத்தையொட்டி அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் குடிநீர், கழிப்பறை, சாலை வசதி செய்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் பேரூ ராட்சி பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தி தர வேண்டுமென்று கேட்டு கொண்டனர். பேரூராட்சி மூலம் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் கும்பாபிஷே கத்திற்கு முன் செய்து தரபடும். கும்பாபிஷேகம் நடைபெறும் 6-ந்தேதி பேருராட்சி பணியாளர்கள் மூலம் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று பேருராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்