Save Soil : 'மண்ணை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்’ ஐ.நா சுற்றுச்சூழல் சபையில் ஈஷா வலியுறுத்தல்..!
மண் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் எடுத்துவரும் முன்னெடுப்புகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுநிலையில், இது குறித்து ஐ.நாவிலும் ஈஷா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது
மண் வளத்தை பாதுகாக்க சர்வதேச அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஐ.நா சுற்றுச்சூழல் சபையின் மாநாட்டில் ஈஷா அவுட்ரீச் திட்ட ஒருங்கிணைப்பாளர் யூரி ஜெயின் வலியுறுத்தினார்.
ஐ.நா சுற்றுச்சூழல் சபையில் (UNEA) ‘பூமி மீதான நம்பிக்கை’ என்ற தலைப்பில் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் உரை நிகழ்த்த ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற ஈஷா அவுட்ரீச் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் யூரி ஜெயின் இணையதளம் வாயிலாக நேற்று (மார்ச் 3) உரை நிகழ்த்தினார்.
அந்த உரையில் அவர் பேசியதாவது:
மண் வளம் இழப்பது என்பது உலகளாவிய பிரச்சினையாகும். இந்தியாவில் 62 சதவீதம் மண் மணலாக மாறி வருகிறது. ஆப்பிரிக்கா 2030-ம் ஆண்டிற்குள் தனது விளைநிலங்களில் மூன்றில் 2 பங்கை இழக்க உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே 50 சதவீத மண் வளத்தை இழந்துவிட்டது. ஐரோப்பாவில் 75 சதவீதம் மண் போதிய சத்துக்கள் இன்றி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டிற்குள் பூமியில் இருக்கும் 90 சதவீதம் மண் தனது வளத்தை இழந்துவிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்க பாதிப்பு போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் மண் வளம் இழப்பது தான். ஆகவே, மண் வளத்தை மீட்டெடுக்க சர்வதேச அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சட்டங்களை இயற்றவும் ‘மண் காப்போம்’ என்ற உலகாளவிய இயக்கத்தை ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் உலகம் முழுவதும் 350 கோடி மக்களிடம் மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இதற்கான சட்டங்களை இயற்ற அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.இதன் ஒரு பகுதியாக, சத்குரு அவர்கள் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ மோட்டர் சைக்கிளில் பயணித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்.
சர்வதேச அமைப்புகள் ‘மண் காப்போம்’ இயக்கத்தை ஈஷாவின் இயக்கமாக கருதாமல் தங்களின் சொந்த இயக்கமாக கருத வேண்டும். யாரெல்லாம் மண்ணில் இருந்து உருவெடுத்தார்களோ, யாரெல்லாம் மண்ணில் நடக்கிறார்களோ, யாரெல்லாம் இந்த உலகை அடுத்த தலைமுறைக்கு இப்போது இருப்பதை விட சிறப்பான உலகாக கொடுக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு இந்த இயக்கம் சொந்தமானது.
இவ்வாறு அவர் பேசினார்.