அங்கக வேளாண்மையில் பூச்சி, நோய் தாக்குதலை எதிர் கொள்ளும் எளிய வழிமுறைகள்
பூச்சிமருந்து அடித்து விளையும் உணவு பொருட்களில் 10 சதவீதம் நச்சுத்தன்மை உள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்: அங்கக வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை எதிர் கொள்ளும் எளிய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
மனிதர்கள், கால்நடைகள் மற்ற உயிரினங்கள் அனைத்தும் உண்ணும் உணவு பொருள்களில் பூச்சிக்கொல்லி எச்சம் எனும் விஷ மருந்துகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பூச்சிகளை கட்டுப்படுத்தி விளைச்சலை மேம்படுத்த நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்துகளே இதற்கு முக்கிய காரணமாகும்.
எனவே ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையில் எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக விளைச்சல் எடுக்கலாம் என்ற வழிமுறைகளை விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால் பயிர்களுக்கு நன்மை தரும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இதனால் உணவு பொருள்களின் தரமும் குறைகிறது. பூச்சிமருந்து அடித்து விளையும் உணவு பொருட்களில் 10 சதவீதம் நச்சுத்தன்மை உள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. மேலும் பயிர்களுக்கு தீமை விளைவிக்கும் பூச்சிகள், இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டு பல்கி பெருகுகின்றன.
இவற்றிற்கெல்லாம் இறுதியான தீர்வாக அமைவது அங்கக வேளாண்மையாகும். இதில் இயற்கை யுக்திகளை கையாள்வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபாடுகள் பெருமளவு குறைக்கப்படுகிறது.
கோடை உழவு செய்வதால் பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள், நோய் பரப்பும் பூசணங்கள் மற்றும் நச்சுயிரி தாக்கிய பயிர் கழிவுகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வந்து வெயிலில் காய்ந்து முழுவதும்' அழிக்கப்பட்டு விடுகிறது. இதனால் அடுத்து பயிரிடப்படும் பயிர்களில் பூச்சி மற்றும். நோய்களின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட விதை அளவுகளையும், நடவு பயிர்களின் அடர்த்தி அளவையும் இடத்திற்கு ஏற்றார்போல பின்பற்ற வேண்டும். விதைப்பதற்கு முன்பாக உயிர் பூசணங்களான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் போன்றவற்றை கொண்டு விதைநேர்த்தி செய்வதால் வேரழுகல் மற்றும் வாடல் நோய்களில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.
இந்த முறையில் ஒரே பயிரை பயிரிடாமல் பல்வேறு பயிர்களை பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
கலப்பு பயிர் சாகுபடி
இந்த முறையில் ஒரே பயிரை பயிரிடாமல் பல்வேறு பயிர்களை பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
ஊடுபயிர் சாகுபடி
முக்கிய பயிருடன் ஊடுபயிர்களை பயிரிடுவதால் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
சோளம் – துவரை - கதிர் நாவாய்பூச்சி
சோளம் – தட்டைப்பயிறு- தண்டு துளைப்பான்
துவரை – சோளம்- தத்துப்பூச்சி காய்ப்புழு
பாசிப்பயறு – சோளம்- தத்துப்பூச்சி
பொறிப்பயிர்களை பயிரிடுதல்
பொறிப்பயிர் மூலம் பூச்சிமேலாண்மை செய்வது தற்போது அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. இங்கு முக்கிய பயிர்களுடன் வரப்பு ஓரங்களிலோ அல்லது நடுவிலோ பொறிபயிர்களை பயிரிவதால் இவை பூச்சிகளை கவர்ந்து முக்கிய பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்த பாதுகாக்கிறது.
புகையிலை, பருத்தி, நிலக்கடலை – ஆமணக்கு- புகையிலை வெட்டுப் புழு
மக்காச்சோளம் – சோளம்- குருத்து ஈ, தண்டு துளைப்பான்
பருத்தி – வெங்காயம், பூண்டு – இலைப்பேன்
முட்டைகோஸ், காலிபிளவர் – கடுகு - வைர முதுகு வண்டு
பருத்தி – செண்டு மல்லி- பச்சைக்காய்ப்புழு
உயிரியல் முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த, தாவர பூச்சிக்கொல்லிகள் ஒட்டுண்ணிகள் மற்றும் ஊண் விழுங்கிகள் பெரும் பங்கு வகிக்கிறது.