கொடி பாகற்காய் சாகுபடியில் நல்ல லாபம்... அறுவடைப்பணிகள் சாமிப்பட்டியில் மும்முரம்
நாங்கள் தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், கத்தரி, பாகற்காய் உட்பட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறோம்.. இதை சற்று மாற்றி மாற்றுப்பயிராக பாகற்காய் சாகுபடியை மட்டும் செய்ய முடிவு செய்து தொடங்கினோம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சாமிப்பட்டி கிராமத்தில் கொடி பாகற்காய் அறுவடை பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிதான் பிரதானமாகும். இருப்பினும் விவசாயிகள் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப காய்கறிகள், கிழக்கு, பூக்கள் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் சாமிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பாகற்காய் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். தற்போது இதில் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த பாகற்காய் சாகுபடி குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: இந்த பகுதியில் ஆரம்பத்தில் நெல் சாகுபடிதான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடிதான் செய்து வருகின்றனர், நாங்கள் தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், கத்தரி, பாகற்காய் உட்பட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறோம்.. இதை சற்று மாற்றி மாற்றுப்பயிராக பாகற்காய் சாகுபடியை மட்டும் செய்ய முடிவு செய்து தொடங்கினோம். மக்களுக்கு நஞ்சில்லா உணவு பொருட்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொடி பாகற்காய் சாகுபடி இயற்கை முறையில் செய்ய முடிவு செய்து தற்போது இதை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த கொடி பாகற்காய் சாகுபடிக்கு முதலில் நிலப்பரப்பை பதப்படுத்தி விதைகளை நிலத்தில் நட்டு தண்ணீர் மற்றும் இயற்கை உரங்களை தெளிப்பதன் மூலம் 4-வது நாளில் கன்று வளர்ந்து விடும். பிறகு பந்தல்கள் அமைத்து 15வது நாளில் செடிகளை பந்தலுக்கு கீழ் நடவேண்டும். மரக்கம்புகளை நட்டு கம்பிகளை வளைத்து கட்டியும் பந்தல் போல் அமைத்தேன். பந்தலுக்கு கீழ் ஒவ்வொரு செடியினை தனித்தனியாக வைத்து கம்பியில் சணல் கயிறுகளை கட்டி செடிக்கு நேராகப் படுமாறு தொங்கவிட்டு செடியில் லேசாக முடித்து போடவேண்டும்.
இதன்மூலம் பாகற்காய் செடியானது சணல் கயிற்றின் மூலம் மேலே பரவி பந்தல் முழுவதுமாக பாகற்காய் கொடியாக உருவாகிறது. இதன் மூலம் எளிமையாக எந்த இடையூறும் இல்லாமல் பாகற்காய் காய்த்து தொங்குகிறது. புடலங்காய் மற்றும் பாகற்காய் விவசாயம் செய்வதற்கும் இந்த வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அமைத்ததால் கொடி பாகற்காய் நன்கு விளைந்து உள்ளது.
அரை ஏக்கர் நிலத்தில் பாகற்காய் சாகுபடி செய்ய ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய முதலில் தொழு உரம் அவசியம். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் இயற்கை முறையில் செய்தாலும், ரசாயன உரங்களை பயன்படுத்தி செய்தாலும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாது. எப்படிப் பார்த்தாலும் மொத்த அறுவடை கணக்கில் 40 சதவீத காய் பூச்சி தாக்குதலால் வீணாகி விடுகிறது.
இதனால்தான் முழுக்க முழுக்க தொழு உரத்தை பயண்படுத்தினால் மட்டுமே ஓரளவிற்கு பூச்சி தாக்குவதை கட்டுப்படுத்த முடியும். கார்த்திகை, மார்கழி, தை இந்த மூன்று மாதம் பாகற்காய் சாகுபடி செய்ய உகந்த மாதமாகும். அப்படியே பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி 80 சதவீதம் அறுவடை செய்தாலும் விற்பனையில் பிரச்சனைகள் ஏற்படும். மார்க்கெட்டில் ஒரே விலை கிடைக்காது. திடீரென உயரும். திடீரென கிலோ மூன்று ரூபாய்க்கு கூட போகும்.
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கூண்டு தோட்டம் முழுவதும் அங்காங்கே மாட்டியுள்ளோம். இதில் இருந்து பரவும் பூச்சிக்கொல்லி வாசத்தால் பூச்சிகள் கூண்டின் உள்ளே செல்லும் போது இறந்து விடும். இதை வைத்த பின்னரே பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடிகிறது. இந்தப் பாகற்காய் சாகுபடி அதிகளவு விவசாயிகள் மேற்கொண்டால் தஞ்சை மட்டும் இன்றி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பலாம். நல்ல லாபம் கிடைக்கும். சரியான முறையில் சாகுபடியை மேற்கொள்ளும் போது நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும்.
மொத்தம் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்தாலும் செலவுகள் போக ரூ.1.50 லட்சம் வரை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்பதால் லாபம் ஒரு நாள் அதிகமாக இருக்கும் ஒரு நாள் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் கொடி பாகற்காய் சாகுபடி நிச்சயம் லாபகரமான ஒன்று தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இயற்கை முறையில் பாகற்காய் விளைவிக்கப்படுவதால் இதை வாங்க உள்ளூர் மற்றும் தஞ்சை பகுதியில் உள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

