Trump warns Modi | பதிலடி கொடுத்த இந்தியா! "இன்னும் அதிக வரி வேணுமா" மிரட்டல் விடுக்கும் ட்ரம்ப்
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் அதிக அளவிலான வரியை செலுத்த வேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருப்பதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பழிக்குப் பழி வாங்குவதாக சொல்லி இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார். அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதலாக 25% வரி விதித்து பரபரப்பை கிளப்பினார். இதன்மூலம் மொத்தமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவும் சீனாவும் டாப் 2 இடங்களில் இருப்பதாகவும், இதன் மூலம் ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்துவதாக பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்ததாக டிரம்ப் கூறினார். அதனை உடனே சட்டென நிறுத்த முடியாது. ஆனால் விரைவில் நிறுத்துவோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது மிகப்பெரிய முன்னேற்றம் என பேசியிருந்தார்.
இதற்கு இந்தியா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி எந்த ஒரு வாக்குறுதியையும் பிரதமர் வழங்கவில்லை என மத்திய அரசு பதிலடி கொடுத்தது.
இந்தநிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசினேன், அவர் ரஷ்ய எண்ணெய் விஷயத்தைச் செய்யப் போவதில்லை என்று கூறினார்," என மீண்டும் தெரிவித்தார். அதேநேரம் அவரது பேச்சுக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததை பற்றி கேட்டதற்கு, அவர்கள் அப்படிச் சொல்ல விரும்பினால், அவர்கள் தொடர்ந்து அதிகப்படியான வரியை செலுத்துவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.





















