Pro Kabbadi 2022: ப்ரோ கபடி லீக் தொடரில் அசத்த இருக்கும் டாப்-5 ஆல் ரவுண்டர்கள் யார் யார்?
ப்ரோ கபடி சீசன் 9 தொடரில் 12 அணிகள் களமிறங்கியுள்ளன. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நாளை முதல் தொடங்க உள்ளது. 12 அணிகள் களமிறங்கும் இந்தத் தொடர் நாளை முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர். இதன்காரணமாக இம்முறை பல வீரர்கள் புதிய அணியில் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில் ப்ரோ கபடி சீசனில் கலக்க காத்திருக்கும் டாப் 5 ஆல் ரவுண்டர்கள் யார் யார்?
கபடி விளையாட்டில் ஆல் ரவுண்டர் வீரராக இருப்பவர் நல்ல ரெய்டு மற்றும் டிஃபெண்ட் ஆகிய இரண்டையும் சிறப்பாக செய்வார். அந்தவகையில் வரும் சீசனில் கலக்க காத்திருக்கும் 5 ஆல் ரவுண்டர்கள்...
விஜய் (தபாங் டெல்லி):
தபாங் டெல்லி அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது வரை ப்ரோ கபடி லீக் தொடரில் 292 ரெய்டு புள்ளிகளை பெற்றுள்ளார். அத்துடன் இவர் 69 டாக்கில் புள்ளிகளையும் தன் வசம் வைத்துள்ளார். அதில் குறிப்பாக 8வது சீசனில் மட்டும் 162 புள்ளிகளை எடுத்து இருந்தார். அதில் 157 ரெய்டு புள்ளிகளும், 5 டாக்கல் புள்ளிகளும் அடங்கும். ஆகவே இந்த முறையும் இவர் ப்ரோ கபடி லீக் தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபக் ஹூடா(பெங்கால் வாரியர்ஸ்):
ப்ரோ கபடி லீக் தொடர் தொடங்கிய 2014ஆம் ஆண்டு முதல் அனைத்து ப்ரோ கபடி தொடர்களிலும் விளையாடி வரும் வீரர்களில் ஒருவர் தீபக் ஹூடா. கடந்த சீசனில் இவர் 117 ரெய்டு புள்ளிகள் மற்றும் 3 டாக்கில் புள்ளிகள் என மொத்தமாக 120 புள்ளிகள் எடுத்தார். கடந்த சீசனில் ஜெய்ப்பூர் அணிக்காக களமிறங்கிய தீபக் ஹூடா இம்முறை பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். ப்ரோ கபடி வரலாற்றில் 140 போட்டிகளில் விளையாடி 973 ரெய்டு புள்ளிகள் மற்றும் 90 டாக்கில் புள்ளிகள் எடுத்துள்ளார்.
முகமது நபிபக்ஷ் (புனேரி பல்டன்):
ஈரான் நாட்டைச் சேர்ந்த முகமது நபிபக்ஷ் ப்ரோ கபடி லீக் தொடரில் விளையாடி வரும் சிறந்த வெளிநாட்டு வீரர்களில் ஒருவர். 2019ஆம் ஆண்டு முதல் இவர் ப்ரோ கபடி லீக் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களாக பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 2 சீசன்களாக இவர் 181 ரெய்டு புள்ளிகள் மற்றும் 49 டாக்கில் புள்ளிகள் பெற்றுள்ளார். அதில் குறிப்பாக 8வது சீசனில் 89 ரெய்டு புள்ளிகள் மற்றும் 19 டாக்கில் புள்ளிகள் பெற்று அசத்தினார். ஆகவே இம்முறை புதிய அணிக்காக களமிறங்கி அசத்துவார் என்று கருதப்படுகிறது.
ரோகித் குலியா (பட்னா பைரேட்ஸ்):
ப்ரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்காக முதல் முறையாக 2017ஆம் ஆண்டு விளையாடினார். அப்போது தொடங்கி அடுத்த இரண்டு சீசன்களில் குஜராத் அணிக்காக அசத்தினார். எனினும் கடந்த சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 15 போட்டிகளில் வெறும் 69 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். அதனால் இம்முறை பட்னா பைரேட்ஸ் அணிக்காக களமிறங்கி தன்னுடைய முழு திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதின் ராவல் (ஹரியானா ஸ்டீலர்ஸ்):
ப்ரோ கபடி சீசன் 9ல் ஹரியானா அணியில் இடம்பெற்றுள்ள ஒரே ஆல் ரவுண்டர் நிதின் ராவல் தான். கடந்த மூன்று முறை ஜெய்ப்பூர் அணிக்காக விளையாடி 59 போட்டிகளில் 192 புள்ளிகளை எடுத்துள்ளார். அதில் 133 ரெய்டு புள்ளிகள் மற்றும் 59 டாக்கில் புள்ளிகளை எடுத்துள்ளார். இம்முறை ஹரியானா அணிக்காகவும் இவர் அசத்துவார் என்று அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.