Tokyo Olympics | டோக்கியோ பாராலிம்பிக்: வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு தருண் தில்லான் ஏமாற்றம்
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் பாரா பேட்மிண்டன் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் தருண் தில்லான் வெண்கலப்பதக்க போட்டியில் விளையாடினார்.
டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு பாரா பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து தருண் தில்லான் வெண்கலப் பதக்க போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் வெண்கலப்பதக்கப் போட்டியில் இந்த பிரிவில் உலக தரவரிசையில் 5ஆம் வீரரான இந்தோனேஷியாவின் ஃபிரடியை எதிர்த்து தருண் தில்லான் விளையாடினார். தருண் தில்லான் இந்தப் பிரிவில் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரர் என்பதால் இப்போட்டியை அவர் வெல்லுவார் என்று அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் போட்டியில் முதல் கேமில் இரு வீரர்களும் சிறப்பாக தொடங்கினர். 15 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை 21-17 என்ற கணக்கில் இந்தோனேஷிய வீரர் ஃபிரடி வென்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமில் தொடக்க முதலே இந்தோனேஷிய வீரர் ஆதிக்கம் செலுத்தினார். 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கேமை ஃபிரடி 21-11 என்ற கணக்கில் வென்றார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தருண் தில்லான் தவறவிட்டார். உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான தருண் ஏற்கெனவே குரூப் பிரிவு போட்டியில் ஃபிரடியிடம் தோல்வி அடைந்திருந்தார். அதேபோல் தற்போது வெண்கலப் பதக்க போட்டியிலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.
#Tokyo2020 #Paralympics #Badminton #Setiawan takes BRONZE as #TarunDhillon loses the second game 21-11.
— Sports For All (@sfanow) September 5, 2021
Fantastic effort from our para-shuttler who couldn't find his rhythm in an otherwise excellent campaign.
🇮🇳0-2🇮🇩#Cheer4India #Praise4Para #AbJeetegaIndia
அடுத்ததாக ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவு பாரா பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஹாங்காங் வீரர் சு மின் கையை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் பிரிவில் கிருஷ்ணா நாகர் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரர் என்பதால் இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெறுவார் என்று அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் படிக்க:‛போலியோ டூ டோக்கியோ’ உலகம் வியக்கும் இந்தியன்: உலக சாம்பியன் பிரமோத் பக்தின் கதை !