Tokyo Olympics: ஆடவர் தனிநபர் வில்வித்தை : முதல் சுற்றில் அடானு தாஸ் வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் அடானு தாஸ் சீன தைபே வீரர் வீழ்த்தியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் கலப்பு மற்றும் குழு போட்டிகள் முடிவடைந்தன. அதன்பின்னர் நேற்று ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு தனி நபர் போட்டிகள் தொடங்கின. நேற்று ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எலிசன் ப்ராடியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் தருண்தீப் ராய் இஸ்ரேல் வீரர் இடேவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ் பங்கேற்றார். அவர் முதல் சுற்றில் சீன தைபே அணியின் செங்கை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் செட்டை அடானு தாஸ் 27-26 என்ற கணக்கில் வென்றார். அதன்மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டை சீன தைபே வீரர் 28-27 என்ற கணக்கில் வென்று 2-2 என சமன் செய்தார். மூன்றாவது செட்டை 28-26 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்று மீண்டும் 4-2 என முன்னிலை பெற்றார். நான்காவது செட்டில் மீண்டும் சிறப்பாக வில்வித்தை செய்த சீன தைபே வீரர் 28-27 என்ற கணக்கில் வென்றார். இரு வீரர்களும் 4-4 என்ற கணக்கில் சமமாக இருந்தனர்.இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க ஐந்தாவது மற்றும் கடைசி செட் நடைபெற்றது. அடானு தாஸ் 28-26 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 6-4 என்ற கணக்கில் முதல் சுற்றை வென்றார். இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் அடானு தாஸ் தென்கொரியா வீரரை எதிர்த்து போட்டியிட உள்ளார்.
#Archery :
— India_AllSports (@India_AllSports) July 29, 2021
Atanu Das moves into 2nd round with 6-4 win over Taipei archer.
2nd round at 0821 hrs IST #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/fMBidxGbYr
முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவு வில்வித்தையில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பங்கேற்றார். அவர் முதல் சுற்றில் பூட்டான் நாட்டின் கர்மாவை 6-0 என வீழ்த்தினார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபரை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறி அசத்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நாளை அமெரிக்காவின் மெக்கென்சியை எதிர்த்து விளையாடுகிறார்.
ஆடவர் குழுப் பிரிவில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் தென்கொரிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. அதேபோல் கலப்பு பிரிவில் பிரவீன் ஜாதவ் மற்றும் தீபிகா குமாரி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி : நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் !