Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்ஸ், டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சத்யன் ஞானசேகரன் தோல்வி..!
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் தோல்வி அடைந்து வெளியேறினார்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளான நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-மானிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியிடம் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானிகா பட்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தங்களுடைய முதல் சுற்றில் வெற்றிப் பெற்றனர்.
இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் ஹாங்காங் வீரர் சியு ஹாங்கை எதிர்கொண்டார். அதில், முதல் கேமை ஹாங்காங் வீரர் சியு 7 நிமிடங்களில் 11-7 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய சத்யன் இரண்டாவது கேமை 8 நிமிடங்களில் 11-7 என வென்றார். அதன்பின்பு மூன்றாவது கேமை வெறும் 6 நிமிடங்களில் 11-4 என வென்று அசத்தினார். நான்காவது கேமிலும் ஒரு கட்டத்தில் 8-0 என முன்னிலை பெற்று இருந்தார். இறுதியில் அந்த கேமை 6 நிமிடங்களில் 11-5 என்ற கணக்கில் வென்றார்.
அடுத்தாக நடைபெற்ற 5ஆவது கேமில் ஹாங்காங் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த கேமை 11- 9 என்ற கணக்கில் சியு ஹாங் வென்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 6ஆவது கேமில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். இறுதியில் 6ஆவது கேமையும் ஹாங்காங் வீரர் சியு 12-10 என போராடி வென்றார். இரு வீரர்களும் தலா 3 கேம்களை வென்று இருந்ததால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க 7ஆவது மற்றும் கடைசி கேம் நடைபெற்றது. இதில் ஹாங்காங் வீரர் 11-6 என வென்றார். இதன்மூலம் ஹாங் 11-7,7-11-7,4-11,5-11,11-9,12-10,11-6 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் 1992ஆம் ஆண்டிற்கு பிறகு 29 ஆண்டுகள் கழித்து இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சர்வதேச தரவரிசை பட்டியலில் 98வது இடத்தில் இருக்கும் சுகிர்தா முகர்ஜி, 78-வது இடத்தில் இருக்கும் லிண்டா பெர்க்ஸ்டார்மை எதிர்கொண்டார். இந்த போட்டியின் ஆரம்பத்தில், சுகிர்தா சொதப்பினாலும், பின் சுதாரித்து கொண்டு கம்-பேக் கொடுத்தார். இந்த போட்டியில், 5-11, 11-9, 11-13, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் லிண்டாவை தோற்கடித்த அடுத்த சுற்றுக்கு சுகிர்தா முன்னேறினார்.
அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனையான மானிகா பட்ரா பிரிட்டன் நாட்டு வீராங்கனையான டின் டின் ஹோவை 4-0 என்ற செட் கணக்கில் எளிதாக விழ்த்தினார். இன்று மதியம் நடைபெறும் இரண்டாவது சுற்று போட்டியில் மானிகா பட்ரா உலக தரவரிசையில் 32ஆவது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை மார்கர்டியா பெசோடஸ்காவை எதிர்த்து விளையாட உள்ளார்.
மேலும் படிக்க: "முதல்ல இதை சாப்பிடணும்” : ஆசைப்பட்ட தங்கமகள் மீராபாய்...! லைஃப்டைம் முழுக்க ஃப்ரீ என்று சொன்ன டோமினோஸ்...!